பக்கம்:மேனகா 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

171

யிருப்பாளோ வென்னும் சந்தேகம் அடிக்கடி அவனது மனதில் தோன்றித் தோன்றி மறைந்தது. சஞ்சலம் குடி கொண்டது. உண்மையில் அவள் எப்படித்தான் மறைந்து போனாளோ, கடிதங்கள் எப்படித்தான் வந்தனவோ வென்று பலவாறு நினைக்க ஆரம்பித்தான். தன்னைக் காட்டிலும் அந்த வெள்ளைக்காரப் பெண் கூரிய பகுத்தறிவைக் கொண்டிருப் பதை நினைத்து அவன் அவளுடன் மேலும் சம்பாவிக்க விரும்பினான். தனது மனைவி விஷயத்தில் இன்னும் அனுகூலமான சங்கதி எதையேனும் அவள் வெளியிடக்கூடு மென்றும், அதனால், தான் பயனடையலாமென்றும் நினைத்து அவன் ஏதோ பேச ஆரம்பித்தான்.

அந்தச் சமயத்தில் அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. டாக்டர் துரையும், துரைஸானியும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட வராகசாமி திடுக்கிட்டுத் தனது கட்டிலில் அமைதியாகப் படுத்துக் கொண்டான். பணிமகள் எழுந்து மரியாதையாக ஒதுங்கி நின்றாள்.

உடனே துரைஸானி கட்டிலிற்கு அருகில் வந்து வராகசாமியின் நாடியைப் பார்த்தாள்; பணிப் பெண்ணின் முகத்தைப் பார்த்தாள். “அடி எமிலி! நல்ல நிலைமையிலிருந்த இவருடைய உடம்பு இப்போது இவ்வளவு படபடப்பா யிருக்கவேண்டிய காரணமென்ன?” என்று அதிகாரமாகக் கேட்டாள்.

எமிலி என்ற பெயர் கொண்ட அந்தப் பணிப்பெண், “அதன் காரணம் எனக்குத் தெரியவில்லை” யென்றாள்.

துரைஸானி:- ஒகோ! உனக்குத் தெரியாதோ! நீ இவருடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி இருக்காது; நீ பெருத்த வாயாடி உன் வாய் ஒரு நிமிஷமும் ஒய்ந்திருக்காது; ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாய்; உன்னை இந்த அறையில் வைத்ததே பிசகு. வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/172&oldid=1252226" இலிருந்து மீள்விக்கப்பட்டது