பக்கம்:மேனகா 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மேனகா

வதைக்கிறது. பயனற்ற இந்த உடம்பை இப்படியே மடிந்துபோக விடாமல் நீ எதற்கு இவ்வளவு உபசரணை செய்து இதை வீணிலே காப்பாற்றி என்ன செய்யப்போகிறாய்? என் உடம்பு தேறி நல்ல நிலைமைக்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு நான் எங்கே போகிறது? என் புருஷன் வீட்டிற்குப் போவதற்கு வழியில்லை. தகப்பனார் வீட்டிற்குப் போய் நடந்தவற்றைச் சொன்னால் அவர்கள் என் சொல்லை நம்பி என்னை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், புருஷன் வீட்டார் என்னைப்பற்றி எவ்விதமான தூஷணை சொல்லுகிறார்களோ தெரியவில்லை. ஒரு வேளை நானே உன் புருஷனிடம் ஓடிவந்து விட்டேனென்று கட்டுப்பாடாகச் சொன்னாலும் சொல்வார்கள். அவ்வளவு அவமானத்தை நானுமடைந்து என் பெற்றோருக்கும் உண்டாக்கி உயிர் வாழ்வது தகுமா? அதைக்காட்டிலும் உயிரை விட்டுவிடுவதே மேலல்லவா! அம்மா! இந்த உபசரணைகளை யெல்லாம் விடுத்து, என்னை ஒரே நொடியில் கொல்லும் விஷத்தில் கொஞ்சம் துரைஸானியினிட மிருந்து வாங்கிக் கொடுப்பாயானால் உனக்குப் பெருத்த புண்ணியம் உண்டாகும்; அதுவே பெருத்த உதவியுமாகும். எத்தனை ஜென்ம மெடுத்தாலும் அதை நான் மறக்கமாட்டேன்” என்று நயமாகக் கூறி வேண்டினாள். அம்மொழியைக் கேட்ட நூர்ஜஹானது மனமும் கண்களும் கலங்கின. கண்ணீர் விடுத்தாள். அவளுடன் சம்பாஷித்தல் கூடாதென துரைஸானி கண்டித்துக் கூறியுள்ளது நினைவிற்கு வந்தது. என்றாலும், மேனகாவிடம் இரண்டொரு வார்த்தைகள் கூறி அவளது மனதைச் சாந்தப்படுத்தி நம்பிக்கை உண்டாக்க வேண்டுவ தவசியமென்று கருதினவளாய், “அம்மா! மேனகா நீ சொல்லுவதெல்லாம் உண்மைதான். இருந்தாலும், இன்னொரு விஷயம் இருக்கிறது. இவ்விதமான விபத்தெல்லாம் உண்டாகுமென்று நாம் கனவிலும் எதிர் பார்த்தோமா? இல்லையல்லவா! அடுத்த நிமிஷத்தில் நமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/18&oldid=1251482" இலிருந்து மீள்விக்கப்பட்டது