பக்கம்:மேனகா 2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

205

ஒடினார். மற்ற மூவரும் கால் நடையாக தங்களுடைய ஜாகைகளை நோக்கிச் சென்றனர்.

அதுவரையில் நடந்தவற்றை யெல்லாம் நன்றாகக் கவனித்திருந்த மந்திரவாதியும் அவர்களுக்குப் பின்னால் நடந்தார். வெயிலுக்காக முகத்தை மறைத்துக் கொள்பவரைப் போல, அவர் தமது உருமாலையால் முகத்தை ஒருவாறு மறைத்துக் கொண்டு பின்தொடர்ந்தார். தீர்த்தாரப்ப முதலி தெருவிற்கருகில் அவர்கள் வந்தவுடன், மரைக்காயர், மற்ற இருவரிடத்திலும் விடைபெற்றுக்கொண்டு அந்தத் தெருவிற்குள் நுழைந்தார். சாமாவையரும் பெருந்தேவி யம்மாளும் தமது வீட்டை நோக்கி மேலும் நடந்து சென்றனர். மந்திரவாதியும் தீத்தாரப்பமுதலி தெருவிற்குள் நுழைந்த கப்பல்கார மரைக்காயரைத் தொடர்ந்து சென்றார். அது மிகவும் ஏழைகளான முகம்மதிய ஜனங்கள் வசிக்கும் சிறிய வீடுகளைக் கொண்ட தெரு. அதில் நாலைந்து வீடுகளுக்கப்பாலிருந்த ஒரு சிறிய வீட்டிற்குள் நமது கப்பல் காரர் புகுந்து மறைந்து போனார். மந்திரவாதி தெருவிலேயே கால்நாழிகை நேரம் நின்றபின்னர் அந்த வீட்டின் வாசலில் வந்து நின்று, “பாயி! பாயி!” என்று கூப்பிட்டார். உள்ளே இருந்த மரக்காயர், “யார் அது?” என்று கேட்டுக்கொண்டு வெளியில் வந்து வாசற்படியில் கதவிற்குப் பதிலாக,விடப்பட்டிருந்த கோணித் திரைக்கு அப்பாலிருந்து தமது தலையை மாத்திரம் நீட்டினார். அப்போது வெளியில் நின்றவர் ஒரு முகம்மதியர் என்பதை அறிந்தவுடன் அவர் திரைக்கு வெளியில் வந்து, “என்ன சங்கதி? நீர் யார்?” என்று கேட்டார். அவர் அப்போது கப்பல் வியாபாரியின் உடைகளைக் கழற்றிவிட்டு கறுவாட்டு வியாபாரியின் உடைகளை அணிந்திருந்தமையால், துணியின் நாற்றம் குபிரென்று வீசியது; சீலைப்பேன்கள் துணியின்மேல் உல்லாசமாகத் துள்ளி விளையாடின. அந்தத் துணியில் காற்று நுழையும் பொருட்டு, பலவிடங்களில் வாசற்படிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/206&oldid=1252379" இலிருந்து மீள்விக்கப்பட்டது