உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே?

217

கனகம்மாள் தனது நாட்டுப் பெண் சயனித்திருந்த தொட்டிலிற் கருகில் உட்கார்ந்து கொண்டு இமைகொட்டாமல் உற்று நோக்கி, தங்கம்மாளின் முகமாறுதல்களைக் கவனித்த வண்ணம், தலையில் வைத்த கையும், தடுமாறித் தவித்த மனதுமாய், சித்திரப்பதுமைபோல அசைவற்றிருந்தாள். அவளது சரீரம் சலனமற்று ஜடத்தன்மை அடைந்தவளாய்த் தோன்றினதேனும், அவளது மனதோ, அப்போதே கூண்டிலடைக்கப்பட்ட காட்டுக் கிளியைப்போலத் துடிதுடித்து அண்டபகிரண்டங்களுக் கெல்லாம் அரை நொடியில் சென்று திரும்பியது. ஆலகால விஷத்தைக் கொண்ட கொடிய நாகத்தினால் தீண்டப்பட்டவனது நிலைமை எவ்வாறிருக்குமோ அவ்வாறே அவளது நிலைமையும் இருந்தது. புற்றிலிருந்து கிளம்பும் ஈசலைப்போல, அவளது மனதில் வேதனைகள் ஊற்று நீராய்ப் பெருகிப் பொங்கின. அவள் தங்களது அப்போதைய நிலைமையைப் பற்றி எண்ணமிடலானாள்; மேனகாவைக் கலியாணம் செய்து கொடுத்து அவளைச் சென்னைக்கு அனுப்பிய நாள்முதல் அந்த நிமிஷம் வரையில் அவர்களது குடும்பத்திற்கு நேர்ந்த துன்பங்களெல்லாம் ஒன்றன் பின்னொன்றாக அவளது மனதாகிய அரங்கமேடையில் தோன்றி நடிக்க வாரம்பித்தன. புராதனமாக எவ்வளவோ செல்வத்திலும் செல்வாக்கிலும் இருந்து மானத்தோடு வாழ்ந்துவந்த தாங்கள் பலவிதத்திலும் இழிவடைந்து கடைசியில் மிகவும் அற்பத் தொகையான இருநூறு ரூபாய் இல்லாமையால் படும் பாட்டையும், விலையற்ற மாணிக்க மான தங்களது நாட்டுப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற யோக்கியதையற்றிருப்பதையும், நினைத்து உருகினாள்: சாம்பசிவம் வரும்வரையில், நாட்டுப் பெண்ணின் உயிர் நிற்கவேண்டுமே என்று கவலையுற்று சோர்ந்தாள். கைகளைப் பிசைந்துகொண்டாள்; எவ்விதத்திலாகிலும் சிறிய ஓசையுண்டானால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/218&oldid=1252393" இலிருந்து மீள்விக்கப்பட்டது