உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே?

221

வைப்பது போல பரம ஏழைகளாகிய எங்களை ஒரே காலத்தில் இத்தனை இடுக்கண்களும் சேர்ந்து அழுத்துவதை நாங்கள் எப்படிச் சகிப்போம்” என்று கனகம்மாள் மேன்மேலும் பிரலாபித்து சுவாமியை வேண்டி வேண்டி விசனமே வடிவாய் ஆத்திரமே உருவாய் ஆவலே மயமாய் ஊணுறக்கமின்றி வாடித் தத்தளித்து உருகி யிருந்தாள்.

முதல் இரண்டு நாட்களிலும் சவம் போலக் கிடந்த தங்கம்மாள் நன்றாக மூச்சு விடுத்து அப்போதைக்கப்போது முக்கி முனகத் தொடங்கினாள்; அதைக் கண்ட கனகம்மாள், அப்போதுதான் ஒரு வேளை உயிர் நிற்கப்போகிறதோ வென்று நினைத்துப் பெரிதும் அச்சமடைந்து கலங்கி, “தங்கம்! தங்கம்!” என்று மெல்லக் கூப்பிட்டாள். மறுமொழி கிடைக்கவில்லை. கண்ணும் திறக்கப்படவில்லை. கனகம்மாள் கைகளைப் பிசைந்து கொண்டாள். வேண்டுதல்களும், பிரலாபங்களும் முன்னிலும் அதிகரித்தன. தனது நாட்டுப் பெண் இனிப் பிழைக்கமாட்டாள் என்னும் நினைவு அவளது மனதில் தோன்றவே கண்ணீர் இருவிழிகளினின்றும் அருவிபோல வழிந்தது; சொற்கள் விசனத்தினால் திக்கித்திக்கி நடுங்கின. “ஐயோ தெய்வமே! இந்தப் பட்டணத்துச் சந்தியில் மனிதரில்லாமல் இப்படித் தவிக்க வேண்டுமா! ஈசுவரா! இது உன் கூத்தா! எனக்கு நல்ல பிள்ளை வந்து பிறந்தான்! பணமில்லாவிட்டாலும் பெண்டாட்டியையாவது கடைசி காலத்தில் பார்க்கக்கூடாதா!, அடாடா! பாவி ஜென்மமே!” என்று மனமுடைந்து சாம்பசிவத்தைத் தூற்றுவாள். இவ்வாறு அவளிருந்த நிலைமை மிகவும் பயங்கரமாகவும் கண்டோர் மனதிளகிக் கதறச் செய்யத்தக்கதாகவும் பரிதாபமாகவும் இருந்தன.

மறுநாட்காலையில் மணி எட்டாயிற்று. வில்லியம்ஸ் திரும்பவும் வழக்கம்போல் பிரசன்னமானார். முதல்நாளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/222&oldid=1252397" இலிருந்து மீள்விக்கப்பட்டது