உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

மேனகா

திருப்பதையும் காண, அவர்களது வயிறு பற்றி எரிந்தது. எவ்வாறாயினும், அந்த வெள்ளைக்காரியை அதிசீக்கிரமாக வெளியில் ஒட்டிவிட வேண்டு மென்று தீர்மானித்துக் கொண்ட சகோதரிமார் இருவரும், அவர்களிருந்த அறைக்கு அடிக்கடி வந்து அவர்கள் என்ன செய்கிறார்களென்று பார்ப்பதும், கூடிக்கூடித் தமக்குள் இரகசியம் பேசுவதும், கதவிற்கு வெளியில் மறைந்திருந்து அவர்கள் பேசுவதை உற்றுக் கேட்பதும், வெள்ளைக்காரப் பெண்ணிடம் கடுகடுத்துப் பேசுவதுமா யிருந்தனர். வராகசாமி பங்களாவுக்கு வந்தபிறகு, அவனுக்கு வீட்டு உணவு கொடுக்கப்பட்டது. பெருந்தேவியும், கோமளமும், அவனுக்கு ஆகாரம் கொடுத்தபோது வெள்ளைக்காரப் பெண் வெளியில் அனுப்பப் பட்டாள். ஆதலின், அவள் அந்தச் சொற்ப காலத்திற்குள் தனது இருப்பிடத்திற்குச் சென்று தனது போஜனம் முதலியவற்றை முடித்துக் கொண்டு வந்துவிடுவாள். அப்புறம் அவள் இரவு பகலாக வராகசாமிக்கு அருகிலிருந்து அவனது நோயை யாற்றி இன்புறுத்திய வண்ண மிருந்தாள். உலகிலுள்ள பெண்டீர் யாவருமே வஞ்சகரென்றும், விபசாரகுணம் உள்ளவரென்றும் நினைத்து வெறுப்படைந்து, பெண் வாடையே தன்மேல் வீசலாகாதென்று நினைத்திருந்த வராககாமியின் மனதை அந்த அழகிய மடமங்கை தனது நற்குணத்தாலும், மனமார்ந்த உபசரணைகளாலும் முற்றிலும் மாற்றி அவனைப் புதிய மனிதனாக்கி விட்டிருந்தாள். அவனது மனைவி மேனகா நாடகக்காரனோடு ஒடிப்போனாளென்று அவன் நினைத் திருந்த எண்ணத்தையும் அவள் மாற்றிவிட்டாள். மேனகா எப்படிக் காணாமல் போனாளோ என்னும் ஒரு சந்தேகமே அவன் மனதிலிருக்கும்படி பணிப்பெண் செய்திருந்தாள். மேனகா காணாமற் போனதற்குச் சகோதரிகள் உத்திர வாதிகளோ, அல்லது மேனகாவே உத்திரவாதியோ, அல்லது வேறு யாராகிலும் உத்திரவாதியோ என்பதை அவன் தகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/247&oldid=1252423" இலிருந்து மீள்விக்கப்பட்டது