பக்கம்:மேனகா 2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

மேனகா

இப்போது இவர்கள் கலியாணம் செய்ய இணங்கா விட்டால், வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; எங்களிடம் அவ்வளவு பணம் கிடையாது- என்றான்.

அதைக் கேட்ட வெள்ளை மடவன்னம் மேன்மேலும் அதிகரித்த ஆச்சரிய மடைந்தவளாய், “நீங்கள் இல்லாத காலத்தில் உங்களுடைய அநுமதியின்றி இவர்கள் இவ்வளவு பெருத்த காரியங்களை யெல்லாம் செய்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வெள்கைக்காரியாகிய நாங்கள் பெண்ணும் பிள்ளையும் ஒருவரையொருவர் கண்டு மனதாரக் காதலித்துச் சம்மதித்த பிறகே, கலியாணம் செய்ய எத்தினிப்போம். நீங்கள் பெண்ணைப் பார்க்கக்கூட இல்லை. உங்களுடைய சகோதரிமார்களாகிலும் பெண்ணைப் பார்த்தார்களா இல்லையோ ஒருவேளை இந்தப் பதினாயிரம் ரூபாய் வருவதற்காகவே இதைச் செய்கிறார்கள் போலிருக்கிறது. அப்படியானால், நீங்கள் பதினாயிரம் ரூபாயைக் கலியாணம் செய்து கொள்வதாக அருத்த மாகிறதன்றி, ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளுவதாக அருத்தமாக வில்லை; இவர்களுடைய சொல்லுக்கு நீங்கள் கட்டாயமாக இணங்குவீர்களென்றே செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது” என்றாள்.

வராக:- ஆம்; அப்படித்தான் நினைத்துச் செய்திருக் கிறார்கள். அவர்கள் உண்மையில் என்னுடைய நன்மையை நாடியே இப்படிச் செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி சந்தேகமில்லை; அவர்களுடைய விருப்பப்படி நான் இதுவரையில் எந்த விஷயத்தையும் செய்து வந்தேன். ஆனால், இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம், என்னுடைய எண்ணம் வேறாக இருக்கிறது. எனக்கு வேறு கலியாணம் செய்து கொள்ளவே ஆசை இல்லை. தவிர, இவ்வளவு சீக்கிரத்தில் கலியாணம் என்ற சொல்லைக் காதால் கேட்கவும் கூசுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/253&oldid=1252429" இலிருந்து மீள்விக்கப்பட்டது