உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

மேனகா

அடியில் சாமாவையரும், பெருந்தேவியும் கையெழுத்திட் டிருந்ததைக் கண்டான்; மேனகாவின் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட கடிதங்களின் எழுத்தும், சாமாவையரது தம்பியால் எழுதப்பட்டிருந்த மனுவின் எழுத்தும் ஒன்றாக இருந்ததைக் கண்டான்; மாயாண்டிப் பிள்ளையால் நாடகக்கார வீராச்சாமிநாயுடுக்கு எழுதிக் கொடுக்கப் பட்டிருந்த ஒப்பந்தப் பத்திரத்தின் எழுத்து முற்றிலும் வேறு மாதிரியாக இருந்ததையும் கண்டான். என்ன செய்வான்! அது இந்திர ஜாலமோ அல்லது உண்மைத் தோற்றமோ வென்ற சந்தேகம் அடிக்கடி எழுந்தது. அவனது சிரம் சுழன்றது; மூளை குழம்பியது. நெஞ்சம் பதறியது. கோபத்தினால் ஹா, ஹூ என உலப்பிப் பெருமூச்சு விடுத்தான்.

அவனது நிலைமை அப்படி இருக்க, ஏதோ கடிதம் வந்ததையும் அதைப் படித்தவுடன் அவன் இவ்வாறு விபரீதமான நிலைமையை அடைந்ததையும், கட்டிலைவிட்டு எழுந்திருக்க முயன்றதையும் கண்ட அந்த வெள்ளைக்கார மடந்தை விவரிக்க இயலாத பெருத்த கவலை கொண்டு மிகுந்த அச்சத்தோடு அவனிடம் நெருங்கி, அவனை அவ்வாறு ஒரு நிமிஷத்தில் மாற்றிய அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது என்ன விஷயமோ வென்று யோசனை செய்து பார்த்தாள். ஒன்றும் புலப்படவில்லை. அன்றலர்ந்த தாமரை மலரினும் அதிகரித்த குளிர்ச்சியும் இனிமையும் வீசிய சுந்தர முகத்தோடு அவள் பணிவாகக் கட்டிலின் அருகில் நின்று, “உங்களுடைய உடம்பு மிகவும் கேவலமான நிலைமையில் இருக்கிறது. இரத்தமே கிடையாது; நீங்கள் இப்படி ஆத்திரப்படலாமா? எழுந்திருக்கலாமா? இன்னம் நாலைந்து நாட்களில் நன்றாக எழுந்திருக்கக் கூடியவர்கள் இதனால் இன்னம் ஒரு மாசத்துக்கு மேல் படுக்கையில் இருக்க நேருமே; ஐயோ! கொஞ்சம் சகித்துக் கொள்ளுங்கள். அது தலைபோகும் விஷயமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/267&oldid=1252443" இலிருந்து மீள்விக்கப்பட்டது