உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

301

இவர் ஒரு நிமிஷத்தில் கப்பல்கார சாயப்புவாக மாற்றி விடுவார்; அப்பனைப் பிள்ளையாகவும், பிள்ளையை அப்பனாகவும் மாற்றுவார்; தம்முடைய தம்பியை நாடகக்காரனாக மாற்றுவார். இவருடைய அபார சக்தி யாருக்கு வரும்! இவர் என்ன செய்தார் தெரியுமா? இந்தப் பங்களாவை வாங்கியதாக உங்களுடைய அக்காளிடம் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டாரோ தெரியவில்லை. அந்தப் பணத்தை இவரே எடுத்துக் கொண்டார்; தீத்தாரப்ப முதலி தெருவிலிருக்கும் கருவாட்டு வியாபாரியான ஒரு சாயப்புவிடம் போய் நூறு ரூபாய் கொடுத்தார்; அவரைக் கப்பல்கார சாயப்புவாக மாற்றினார், விக்கிரயப் பத்திரம் தயாரித்தார்; மகாலிங்கையர் பிள்ளை சாமாவையர் என்பதற்குப் பதிலாக சாமாவையர் பிள்ளை மகாலிங்கையர் என்று தம்மை மாற்றிக் கொண்டு சப் ரிஜிஸ்டிரார் கச்சேரியில் சாட்சியாக ஆஜராயினார்; பங்களாவை வாங்கி விட்டதாகப் பொய்ப்பத்திரம் தயாரித்துப் பதிவு செய்து உங்களுடைய சகோதரியிடம் கொடுத்து விட்டார். பங்களாவின் உண்மை யான சொந்தக்காரர் நாகைப்பட்டணத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு மாசத்து வாடகைப் பணத்தை ரகசியமாக அனுப்பி விட்டு, பங்களாவைத் தமது வசப்படுத்திக் கொண்டு அதில் உங்களைக் குடிவைத்தார். இத்தனை திருவிளை யாடல்களையும் செய்த இவர் ஒரு விஷயத்தை மாத்திரம் கவனிக்க மறந்து விட்டாரோ அல்லது அதைப் பிறர் கவனிக்க மாட்டார்களென்று நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. சப் ரிஜிஸ்டிரார் கச்சேரியில் தம்முடைய கையின் ரேகை அடையாளம் இருக்குமே யென்பதையும், அதனால் பிறர் இந்த ரகசியத்தைக் கண்டு கொள்வார்களே என்பதையும் மறந்து விட்டார். இருந்தாலும் இவருடைய அபார வல்லமையை நாங்கள் மனதார மெக்சுகிறோம்; அதன் பொருட்டே நாங்கள் இந்த மரியாதையை நடத்த வந்தோம். அடே! ஜெவான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/302&oldid=1252478" இலிருந்து மீள்விக்கப்பட்டது