உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டு முதல்

329

இன்பகரமானதோ அதுவே அவளுக்கும் இன்பகரமானது. அவனை மகிழ்விப்பதையே அவள் பெருத்த பாக்கியமாக மதித்தாள்; கதை சொல்லச் சொன்னால் கதை சொல்லுவாள்; காலைப்பிடி என்றால் அப்படியே செய்வாள். அவனுக்கு சேவை செய்வதில் எத்தனை இரவு பகல்கள் கழியினும் அவளுக்குச் சலிப்பென்பதே கிடையாது. அவனும் அவளைத் தனது உயிர் நிலையாகவும், எவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற பெருத்த பாக்கியமாகவும் மதித்தான். அவன் கச்சேரியில் வேலை செய்யும்போதுகூட மேனகாவின் இங்கித வடிவமே அவனது கண்களின் முன்பு தாண்டவமாடி நிற்கும்; அவ்வாறு அவர்கள் நொடியேனும் இணைபிரியாத ஜோடிப் புறாக்களைப்போலவும், நாகணவாய்ப் புட்களைப்போலவும், அன்றிலிணையைப் போலவும், ஒயாமல் ஒன்று பட்டிருந்தன ரெனினும், பழகப் பழக பாலும் புளிக்கு மென்னும் பழ மொழிக்கு மாறாக அவர்களிருவரது ஜீவனும் மனமும் காந்தமும் இரும்பும்போல ஒன்றுபட்டு ஒருருக் கொண்டன. அவர்களது நட்பு கரும்பை நுனியிலிருந்து தின்று கொண்டு அடிக்குப்போவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் அதிகரிக்கும் இன்பம் பயப்பதாயும், சுவையுடைய தாயும் வளர்ந்து வந்தது. மேனகாவோ தான் ஜில்லா கலெக்டரது ஒரே பெண்ணென்பதையும், சப் ஜட்ஜியின் மனைவி யென்பதையும் சிறிதேனும் பாராட்டாமலும், செருக்கடையாமலும், தான் கணவனுக்கு உகந்தவிதம் நடக்க வேண்டிய மனைவி யென்பதையே கடைப்பிடித் தொழுகி வந்தாள். தற்காலத்தில் திடீரென்று பெரிய பதவிகளுக்கு வருபவரது மாளிகையி லுள்ள சில பெண்டீரைப்போல தனிமையில் சேவகர்களோடும் மோட்டார் வண்டிகளில் அமர்ந்து உவாவுவதும், சாமான்கள் வாங்கப் போகிறதும், சமையற்காரர் சேவகர் முதலியோருடன் லஜ்ஜையின்றிப்பேசி ஆண்பிள்ளைகளைப்போல அதிகாரம் செலுத்தி பிறர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/330&oldid=1252782" இலிருந்து மீள்விக்கப்பட்டது