பக்கம்:மேனகா 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மேனகா

கிடுகிடாயமாகப் பறக்க வாரம்பித்தது. சாமாவையரும் தமது மனக்குதிரையைத் தட்டிவிட்டார். அதுவும் தனது வேலையைச் செய்யத் தொடங்கியது. அவர் இன்பகரமான நினைவுகளில் ஆழ்ந்தார். சென்ற சின்னாட்களாக அவர் பிறவிக்குருடன் திடீரென்று பார்வை பெற்றதைப்போல விருந்தார். பிறந்த நாள் முதலாக, நித்திய தரித்திர நிலைமையி லிருந்துவந்த ஐயரவர்கள் தம்முடைய தென்று ஒரு பவுனைக் கூடக் கண்டவரன்று. திடீரென்று புதையல் அகப்பட்டதைப்போல, அவரிடம் ரூபா பதினாயிரம் வந்து சேருமானால், அவர் மனதிலுண்டாகும் களிப்பும், பூரிப்பும், ஆநந்தமும் அளவில் அடங்கியவை யாமோ? ஒரு நிமிஷத்தில் அவர் தமது பழைய நிலைமையை மறந்து, புது மனிதராக மாறிவிட்டார். அந்தப் பணத்தை என்ன செய்வது? வட்டிக்குக் கொடுப்பது நல்லதா, அல்லது அதை வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்வது நல்லதா, அன்றி பங்களாவை வாங்குவதே உசிதமா வென்று பல நாட்கள் இரவுகளில் தனிமையிலும் தமது மனைவியோடு கலந்தும் யோசனை செய்தார். “பங்களா பாதி விலைக்கு வருகிறது. அதில் துரை மாரைக் குடி வைத்தால் மாதம் ஒன்றுக்கு ரூ.200 கிடைக்கும். அதில் உற்பத்தியாகும் பழமரங்களின் மகசூல் வருஷத்தில் ஆயிரம் ரூபா கொடுக்கும். ஆகையால், பங்களாவை வாங்குவதே சிறந்தது என்று நினைத்து அவ்வாறே முடிவு கட்டிக்கொண்டார். தவிர பங்களாவில் பெருந்தேவி முதலியோரைச் சிறிது காலமாயினும் குடிவைக்காமல், பணத்தை அப்படியே அபகரித்துக்கொண்டால் மூடர்களான அவ்விரு சகோதரி மாரும் ஆத்திரமடைந்து, தம்மோடு பெருத்த சண்டை யிடுவரென்றும், மேனகாவை விற்றது முதலிய இரகசியங்கள், அதனால் வெளிப்பட்டு விடுமென்றும், பிறகு தமக்குப் பல துன்பங்கள் சம்பவிக்குமென்றும் நினைத்தார். ஆகையால் பங்களாவை தமது பேருக்கு வாங்கிக்கொண்டு, அவர்களைச் சில மாதங்கள் வைத்திருந்து, பிறகு வக்கீல் மூலமாக நோட்டீஸ் கொடுத்து அவர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/42&oldid=1251855" இலிருந்து மீள்விக்கப்பட்டது