உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

47

புதல்வியைப் போலக் காணப்பட்ட அந்த யெளவன மின்னாள் நடு இரவில் தனியாகப் பிரயாணம் செய்யத் துணிந்ததே அவருக்குப் பெருத்த விந்தையாக இருந்தது. பாலியப் பருவத்தினரான சாமாவையர் என்ன செய்வார்? ஏதோ பெருத்த விபத்தில் அகப்பட்டவரைப்போலத் தமது மதியை இழந்து தவிக்கிறார். தீயின்மேல் வெண்ணெயென உருகி உட்கார்ந்து போனார். அவளது ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்து அதன் அழகிலேயே ஈடுபட்டு, தேனில் வீழ்ந்த ஈயைப்போலத் திகைத்து வாயைப் பிளந்து அசைவற்று உட்கார்ந்து ஏங்கினார். அவள் வெளிப்புரத்தில் விட்டிருந்த தனது முகத்தை எப்போது உட்புறம் வாங்கித் திரும்புவாளோ வென்றும், அதை எப்போது கண்ணாரக் கண்டு மனதார உண்டு களிக்கலாமோ வென்றும் ஆவல் கொண்டு பதறினார். அதுகாறும் பொன்னாசையில் நெடுந்துாரஞ் சென்றிருந்த அவரது மனதை அந்தப் பெண்ணாசையில் மிகுந்த உரத்தோடு தாக்கித் திரும்பியது. அந்த அதிர்ச்சியினால் அவரது மனவுரமும் தரித்திரக் குணமும் சிதறிப்போயின. உள்ளமும் உடம்பும் நெகிழ்வடைந்து, தயாள குணமும் கண்ணிய புத்தியும் உண்டாயின. அவள் திருவாரூரில் இறங்கிப்போவதற்குள் அவளுடன் ஒரு சொல்லாயினும் பேசாவிடில் தமது ஜென்மம் கடைத்தேறாதென வெண்ணினார். தம்மை புலியோ கரடியோ வென்று நினைத்து அஞ்சி, பிடிவாதமாய் தனது முகத்தை வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த மங்கையுடன் தாம் எதைக் குறித்துப் பேசுவது என்பதையும் எப்படிப் பேசுவது என்பதையும் அறியாதவராய் மிகவும் தத்தளித்தார். அவரது மனோவேதனையை ஒரு சிறிதும் அறியாத துஷ்ட ரயில்வண்டி கிடு கிடு குடு குடு கிலு கிலு குலு குலுவென்று தாளம், மத்தளம், கஞ்சிரா முதலிய வாத்தியங்களின் முழக்கங்களைச் செய்து கொண்டு ஓடி திருவாரூருக்கும் அதற்குமுள்ள இடைத் தூரத்தைக் குறைத்துக்கொண்டேயிருந்தது. அவர்களிருந்த ரயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/49&oldid=1251862" இலிருந்து மீள்விக்கப்பட்டது