பக்கம்:மேனகா 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மேனகா


வண்டி புறப்பட ஆயத்தமாகி ஊதியது. மணியும் அடிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஒரு பிரயாணி ஓடி வந்து சாமாவையரிருந்த வண்டியின் கதவை விசையாகத் திறந்தான். அந்த மனிதனுக்கு வயது இருபத்தைந்திருக்கலாம். அவனும் சுந்தர புருஷனாகக் காணப்பட்டான். அவனும் அந்த வண்டிக்குள்ளிருந்த காந்தத்தினால் கவரப்பட்டே, அதில் ஏற உறுதி செய்து கொண்டு கதவைத் திறந்தான். திரிசங்கு சுவர்க்கத்திலிருந்த சாமாவையர், தமக்கு அவனால் நேரும் விபத்தை உணர்ந்து திடுக்கிட்டவராய் வண்டியின் கதவை உறுதியாகப் பிடித்துக்கொண்டு, “ஐயா! அடுத்த வண்டி காலியா யிருக்கிறது. தயவு செய்து அதில் ஏறிக்கொள்ளும். நாங்கள் இரவில் நெடுந்துரம் போகிறவர்கள் இருவரும் இரண்டு பலகைகளிலும் படுத்துக் கொள்ள வேண்டும்” என்றார். வந்தவன் ஆத்திரத்தோடு, “சரிதானையா! கதவை விடும். வண்டி போய்விடும்போலிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே கதவை வேகமாய் வெளியில் இழுத்தான்.

அவன் ஏறுவதைப் பலவந்தமாகத் தடுத்துவிட நினைத்த சாமாவையர் உடனே வேகமா யெழுந்து தமது முழு பலத்தையும் உபயோகித்து கதவை உள்ளே இழுத்துப் பிடித்துக்கொண்டு ஓங்கிய குரலில், “இங்கே பெண்பிள்ளை தனிமையில் இருக்கிறாள் என்று சொல்லுகிறேன். என்ன ஐயா முரட்டுத்தனம் செய்கிறீர்? நீர் இங்கே ஏறக்கூடாது. ஏராளமான நகைகளும் பணமும் இருக்கின்றன. ஏதாவது காணாமற்போனால் நீர் உத்திரவாதி யாவீரா? போமையா அடுத்த வண்டிக்கு” என்று அதட்டிக் குரல் செய்து, அவனது மார்பில் கையைக் கொடுத்து முரட்டுத் தனமாகத் தள்ளினார். கீழே விழ விருந்த அந்த மனிதன் சிறிது தத்தளித்து ஒருவாறு சமாளித்துக் கொண்டு வீராவேச மடைந்து திரும்பவும் பாய்ந்தான். அதைக் கண்ட பெண் முதலிடத்திலிருந்து, கடைசிக்கு நகர்ந்துவிட்டாள். வந்த மனிதன், “அடே! என்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/67&oldid=1251903" இலிருந்து மீள்விக்கப்பட்டது