உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மேனகா

வளர்த்து, கல்வி, நல்லொழுக்கம் முதலியவற்றில் பயிற்றி, இரண்டு ஒப்பற்ற நட்சத்திரச் சுடர்களைப்போல் மதித்துப் பாதுகாத்து வந்ததன்றி, அவர்கள்தான் தமது மேலான பாக்கியமென்று நினைத்து நினைத்து அளவளாவி யிருந்தார்.

இருவரையும் நெருங்கிய உறவினர்களின் புத்திரருக்கு மணம் புரிவித்தனர். ஆனால், அலிமாபீபியின் கணவன் இறந்து போயினன். அவர் அதைக் குறித்துப் பெரிதும் விசனத்தில் ஆழ்ந்தாராயினும், இளைய குமாரியான நூர்ஜஹானும் நைனா முகம்மதுவும் மனமொத்த காதலோடு வாழ்ந்து வருவதாக நினைத்து ஒருவாறு ஆறுதலடைந்தார். நைனா முகம்மது மிகவும் யோக்கியமான நடத்தை வாய்ந்த வனென்றும், தமது புதல்வி அவனிடம் இன்புற்று வாழ்ந்து வருகிறாள் என்றும் நினைத்துப் பெருமகிழ் வடைந்து வந்தார்.

அந்த நிலையில் மேனகாவின் விஷயம் அவர் செவிகளில் பேரிடியைப் போல வந்து தாக்கியது. அவளை அவன் தன் வீட்டிற்கு வரவழைத்து வற்புறுத்தியதையும், அன்று அவன் வாயினாலேயே வெளிவந்த பல இரகசியங்களையும் அலிமாபீவி சொல்லக் கேட்டபோது, அவர் அவற்றை உண்மை யென்று நம்பவில்லை; ஏதோ தவறுதலாக, அவள் அந்தச் செய்தியைத் தெரிவிப்பதாக நினைத்தார். ஆனால், தமது பங்களாவில், மேனகா நோய் கொண்டு கிடந்ததையும், டாக்டர் துரைஸானி வந்து வைத்தியம் செய்ததையும் கண்ட பிறகே அவர் மனதில் அச்செய்தி உண்மையானதென்று பட்டது. பெருத்த வியாகுலத்தில் ஆழ்ந்தார். தாம் எல்லாவற்றிலும் சிறந்த பாக்கியமாக மதித்துப் பாராட்டி வந்த தமது செல்வப் பெண்கள் இருவரும் கணவன் விஷயத்தில் துர்பாக்கிய முடையவர்களாய்ப் போனதை நினைத்து நினைத்து உருகி உட்கார்ந்துபோனார். பெருத்த விசனத்தினால் புண்பட்ட அவரது மனம் தமது உத்தியோகத்திலும் செல்லவில்லை; அவர் வேறு எத்தகைய செளகரியத்தையும் தேடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/83&oldid=1251932" இலிருந்து மீள்விக்கப்பட்டது