உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயசஞ்சீவி ஐயர்

85

மருமகப்பிள்ளை இவளிடத்தில் தகாத சொற்களைக் கூறிக்கொண்டிருந்தார். அப்புறந்தான் மற்ற சங்கதிகள் வெளிவந்தன.

பெரிய:- நடந்த காரியங்களை நினைக்க நினைக்க இவைகளெல்லாம் எனக்குப் பெருத்த அதிசயமாகவே இருக்கின்றன. இந்த குமாஸ்தாவும், வக்கீலின் அக்காளும் சேர்ந்துகொண்டு எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியம் செய்திருக்கிறார்கள் நாடகம் பார்க்கப் பெண்ணை அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லி, பெண்ணை ஏமாற்றி நம்முடைய வீட்டில் கொணர்ந்து விட்டதும், புருஷன் உண்மையை அறிந்துகொள்ளாமல் இருக்கும்படி நாடகக்காரன் எழுதியதைப் போலப் பொய்க் கடிதம் எழுதி பெட்டியில் வைத்திருந்ததும் சாதாரணமான ஜனங்கள் செய்யத் தகுந்த காரியங்களா! அவர்கள் எதற்கும் துணிந்த பெருத்த ஆசாமிகள்! ஆகா! கடிதத்தைப் பற்றிய விஷயங்களையெல்லாம் டாக்டர் துரைஸானி சொன்னாள் என்றாயே! அவளுக்கு இந்த ரகசிய மெல்லாம் எப்படித் தெரிந்தது?

நூர்:- துரைஸாணி நேற்று மாலை 7 மணிக்கு இங்கே வந்தாள். மோட்டார் வண்டியில் அறைபட்ட மனிதரைப்பற்றி அப்போது பிரஸ்தாபம் ஏற்பட்டது; அந்த மனிதரே இந்தப் பெண்ணின் புருஷன் என்பது உடனே தெரியவந்தது; தனது புருஷனுக்கு நேர்ந்த விபத்தைக் கண்டு பொறாமல், இந்தப் பெண் மூர்ச்சித்து விழுந்தாள். இவளுக்குத் தேவையான மருந்தைக் கொடுத்துவிட்டு துரைஸானி அவசரமாக வைத்திய சாலைக்குப் போய்விட்டாள். இன்று காலையில், இந்தப் பெண்ணின் தகப்பனாரான தஞ்சாவூர் டிப்டி கலெக்டரும் அவருடைய தாயாரும் சாமாவையரும் அங்கே வந்து வண்டியில் அறைபட்டவரைப் பார்த்தார்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/86&oldid=1251938" இலிருந்து மீள்விக்கப்பட்டது