பக்கம்:மேனகா 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மேனகா

மயன், விசுவகருமன் முதலிய தெய்வலோகத்தின் இஞ்சினீர்களது நிருமாணச் சக்தியைக் கொண்டது. அவர் கட்டும் கதைகளோ அரபிக் கதைகளிலும் அற்புதமான காற்று மூட்டைகள்; அவரது புத்தியும் விவேகமும், மகா தீவிரமும் கூர்மையும் பொருந்தியவை. நூலாசிரியர்கள் தமது மனோ வல்லமையால் பலவகைப்பட்ட மனிதரையும், விஷயங் களையும் சம்பவங்களையும் நிஜம்போல நிருமாணித்துக் காகிதத்தில் காட்டுவதைப் போல, பிள்ளையவர்கள் உண்மை மனிதரை எடுத்துக் கொண்டு பொய்யான விஷயங்களை சிருஷ்டித்து அதனால் பல திருவிளையாடல்கள் செய்து வந்தார். உண்மையான குற்றவாளி கச்சேரிக்கே வருவதில்லை. அவனிடம் பெருத்த அபராதத்தொகையை அவரே வசூலித்து எடுத்துக்கொள்வார். வேறு மனிதரைக் கொணர்ந்து சாம்பசிவத்தின் கச்சேரியில் நிறுத்துவார். அவரிடம் கொண்டு வரப்படும் ஆயிரம் பொய்க் கேஸ்களில் ஒன்றாகிலும் ஊத்துக்கு நிற்பதில்லை. யாவும் பொய்யாகவே புகைந்துபோம். சாம்பசிவத்தின் பகுத்தறிவின் முன் அவரது புளுகு மூட்டைகள், நீர்க்குமிழிகளைப் போல உடைந்து வெறுமையாய்ப் போவதே வழக்கமா யிருந்தது; குற்றமற்றவர்கள் யாவரும் விடுபட்டு சாம்பசிவத்தை வாழ்த்திக் கொண்டுசென்றனர். அதனால் பிள்ளையவர்கள் மேலதிகாரிகளிடத்தில் கடுமையான கண்டனங்கள் பெற்று வந்தார்; அவருக்குக் கிடைத்திருந்த கரும்புள்ளிகள் (Black Marks) சோளக்கொல்லைப் பானைகளின் புள்ளிகளிலும் அதிகமாக இருந்தன. அவரது சம்பளமோ ரூபாய் இரு நூறிலிருந்து நூற்றைம்பதாகச் சுருங்கி விட்டது. இவ்வாறு அவர் டிப்டி கலெக்டரால் பெருத்த துன்பங்களுக்கு ஆளாய் வேலையை இழக்கும் நிலைமையிலிருந்தார். ஆகையால் அவர் சாம்பசிவத்தின் மீது கடும் பகைமை கொண்டிருந்தார். பிள்ளையவர்களின் ஆத்திரம் வடவாமுகாக் கினிக்கும், நரகத்தீய்க்கும் ஒப்பிடத்தக்கதாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/97&oldid=1251970" இலிருந்து மீள்விக்கப்பட்டது