பக்கம்:வசந்த மல்லிகா.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

வஸந்தமல்லிகா

இராப்பகலாய் அவருக்கருகிலிருந்து சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றினாளாம். அவள் யாவளென்பதை அறிய இதைப் படிப்போர் விரும்பலாம். தஞ்சை அரண்மனையில் நடைபெற்ற பூனா தேசத்து நாடகத்தில் ஸ்திரீ வேஷம் தரித்து நிரம்பவும் பெயர் பெற்ற தமயந்திபாயி, கம்பியிலிருந்து விழுந்தவள், சென்னையில் பெரிய வைத்திய சாலைக்கு வந்ததாக முன்னரே தெரிவித்தோமல்லவா. அவளது தேகம் சௌக்கியமடைந்தபின் ஒரு நாள் வண்டியில் வந்தபோது அவளே வஸந்தராவை எடுத்துக் காப்பாற்றினாள். அவர்களிருவரும் இப்போது சௌக்கியமடைந்து விட்டனர். அவர்கள் ஒருவர் மீதொருவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பை நோக்க, அவ்விருவருக்கும் கலியாணம் நடக்கும் போலிருக்கிறது. இனியாகிலும் அந்த ஜெமீந்தார் ஊரூராய் அலையாமல், தமது சமஸ்தானத்தில் தங்கியிருந்து குடிகளுக்குத் தேவையான நன்மைகளைச் செய்வாரென்று நம்புகிறோம் - பொய்யாமொழியன் என்று படித்தாள் கிருஷ்ணவேணி. அதைக் கேட்ட மல்லிகாவின் மனம் குழம்பியது; முகம் மாறியது; அறிவு பேதலித்தது. அவளது கண்களுக்கு முன்பாக அந்த அறையும் அதிலிருந்த வஸ்துக்களும் சுழலுவதைப்போல் இருந்தன. அவள் பிறரிருந்ததை கவனியாமல் மெய்மறந்து சாய்ந்து விட்டாள்.

"ஆகா! தமயந்திக்கு எவ்வளவு அதிர்ஷ்டம் பார்த்தாயா! ஒரு சாதாரணப் பள்ளிக்கூட வாத்தியாரின் மகள் பெரிய ஜெமீந்தாரியாகப் போகிறார்களாமே!" என்று வியப்போடு கூறினாள் கிருஷ்ணவேணி. அதற்கு மல்லிகா எவ்வித மறுமொழியும் சொல்லாமல், "ராத்திரியெல்லாம் கண் விழித்ததனால் எனக்கு உடம்பு ஒரு மாதிரியாக இருக்கிறது. நான் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ளுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய் ஒரு பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

மறுநாட் பகலில், கிருஷ்ணவேணியும் அவளது தந்தையும் தமது சொந்தக்காரர் ஒருவரது வீட்டிற்குப் போய்விட்டு மாலையில் வருவதாகச் சொல்லிப் போயினர். மல்லிகா தனது விசனத்தை அடக்க, அதைப் பற்றி நினைப்பதே கூடாதென்று உறுதி செய்து சதாரத்தின் பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது யாரோ வாசற்கதவைத் தட்டிய ஓசையைக் கேட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/164&oldid=1233827" இலிருந்து மீள்விக்கப்பட்டது