பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வனதேவியின் மைந்தர்கள்

எல்லாமே இணைந்து முன்பின் அறிந்திராத ஒர் இலயத்துள் அவளை ஒன்றச் செய்திருக்கின்றன. இதுவே மானுடப் பிறவி எடுத்திருப்பதனால் எய்தக் கூடிய வீடுபேறோ? இது கணமோ? யுகமோ? அவள் மானோ? மயிலோ? கரடியோ? மீனோ? தத்தம்மாவோ? தாமரைத் தண்டோ? பாடித்திரியும் சிறு

வண்டோ?. எல்லாம் எல்லாம் அவள்.

அவள் அன்னையாகப் போகிறாள். அவள் குழந்தை. அன்னை மடியில், அவள் குழந்தை.

ஒடத்தில் கங்கை நடுவே அவள் இருக்கிறாள் பல்லக்கில் அவள் அசைந்து செல்கையில் தத்தம்மா தோளில் இருந்து மழலை பேசுகிறது. அதன் இனிமை ததும்புகிறது. சொல் புரிய வில்லை. அந்தப் புரியாத மழலையைக் காலமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

“தேவி! பொழுது புலர்ந்து விட்டது; பூபாளம் இசைக் கிறார்கள். கண்மலருங்கள்!” அவந்திகாவின் குரல்.

“இனிய இலயங்களில் ஒன்றி இருக்கிறேன். அவந்திகா, எனக்கு மாளிகைக் சட்டதிட்டங்கள் எதுவும் வேண்டாம்!”

“மன்னர் வந்து காத்திருக்கிறார், தேவி! அவசரச் செய்தி போல் இருக்கிறது!”

அவள் திடுக்கிட்டுக் கண்விழிக்கிறாள். உணர்வுகள் கலைகின்றன.

அவள் கானகத்தில் புல்படுக்கையில் கண்ணயர்ந் திருக்கிறாள். காலை இளம் பரிதியின் கிரணங்கள் இதமாக அவளுக்கு முகமன் கூறுகின்றன. வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.

பறவைகள் அவளுக்கு உதய கீதமிசைக்கின்றன.“தத்தம்மா.” என்று கண்களை மேலே நிமிர்த்திப் பார்க்கிறாள்.

தத்தம்மாவைக் காணவில்லை.