பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

வனதேவியின் மைந்தர்கள்

அவள் இருந்திருக்கும் இத்தனை நாட்களில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லை. இப்போது சத்தியமுனிவர் வந்து அடி வைத்ததும் இது நிகழ வேண்டுமா?

பசுவும் கன்றும் முற்றத்தில் வந்து நிற்கின்றன.

சம்பூகன் முனிவரைப் பணிந்து வணங்குகிறான்.

“மகனே, மறுபடியும் தொந்தரவா?...”

“இல்லை சுவாமி. தாய்ப்பசு குரல் கொடுத்ததும் நான் பார்த்துவிட்டேன். காயத்துக்கு மருந்து போட்டேன்...”

“அது சரி, வேம்பு வனஊரணிக் கரைக்குப் போயிருக்கிறாயா?”

“இல்லை சுவாமி!”

“அது குன்றின் மேலிருக்கிறது. அங்கு அபூர்வ மூலிகைகள் உண்டு. நச்சரவங்களும் மிகுதி. அங்கு நாம் சென்று சில மூலிகைகள் கொண்டு வருவோம். மாதுலனின் பார்வை வருமா என்று பார்ப்போம்.”

நந்தசுவாமி ஒற்றை நரம்பு யாழை மீட்டுகிறார்.

பாட்டுப் பிறக்கிறது.


          “வானரங்கின் திரைவில குதாம்!
          வானும் மண்ணும் துயில் நீங்குதாம்
          வனதேவி கண் விழிக்கிறாள்...
          வானும் மண்ணும் கண்விழிக்குதாம்.
          வனதேவி அசைந்து மகிழ்கிறாள்
          வானும் மண்ணும் இசைந்தியங்குதாம்
          வனதேவி சாரல்பொழிகிறாள்...
          வானும் மண்ணும் புதுமை பொலியுதாம்.
          வனதேவி சுருதி கூட்டுறாள்...
          வானும் மண்ணும் குழலிசைக்குதாம்...