பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

209

22

பூமகள் காலையில் வழக்கம் போல் முற்றம் குடில் சுத்தம் செய்துவிட்டுக் காலை வந்தனம் செய்யச் சென்றிருக்கும் பிள்ளைகளை எண்ணியவாறு, தயிர்கடைந்து கொண்டிருக்கிறாள். மரத்தில் கடைந்த அந்த மத்து, அழகாக குழிந்தும் நிமிர்ந்தும் வரைகளை உடையதாகவும், எட்டுமூலைகளை உடையதாகவும் இருக்கிறது. மிதுனபுரிக்கலைஞர்கள், இத்தகைய சாதனங்களை எப்படி உருவாக்குகிறார்கள்? இம்மாதிரியான பொருட்களை நந்தமுனி அவளுக்கு வாங்கிவந்து தருகிறார் அருமை மகளுக்குச் சீதனம்.... ஒருகால்..... அவர்..... ஒருகாலத்தில் அபசுரம் எழுப்பி இருப்பாரோ? நெஞ்சு உறுத்துகிறது. இல்லை அபகரம் இழைக்க இருந்தது மிதுனபுரி அன்னையாம். அபகரம் இழைத்த நாணை நீக்கி, வேறு நாண் போட்டு எனக்கு, இந்த சுரம் எழுப்ப உயிர்ப்பிச்சை அளித்தவர், குருசுவாமி... இப்படி ஒரு நாள் பேச்சுவாக்கில் வந்தது செய்தி. நேர்ச்சைக்கடனுக்கு, மகனைப் பலி கொடுக்க. இருந்த போது, சத்தியர் மீட்டு, பாலகனைத் தமக்குரியவனாக்கிக் கொண்டாராம். காலை நிழல் நீண்டு விழுகிறது.

“மகளே! வெண்ணெய் திரண்டுவிட்டதே! இன்னமும் என்ன யோசனை?” சத்திய முனிவரும் நந்தசுவாமியும் தான்.

அவள் உடனே எழுந்து கை கழுவிக் கொண்டு அவர்கள் முன் பணிந்து ஆசி கோருகிறாள்.

“எழுந்திரு மகளே, உனக்கு மங்களம் உண்டாகும். இந்த வனம் புனிதமானது...” இருக்கைப் பாய் விரிக்கிறாள். உள்ளே மூதாட்டி இருக்கிறாள்.

“பார்த்தீர்களா? குதிரையை இங்கு அனுப்பி மேலும் பதம் பார்க்கிறார்கள், இது நியாயமா? நீங்கள் தருமம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!” அவள் முறையிடும் குரல் நைந்து போகிறது.

“வருந்தாதீர்கள் தாயே! எப்படிப் பார்த்தாலும் தருமம் நட பக்கலில் இருக்கிறது...."

வ. மை. - 14