பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

வனதேவியின் மைந்தர்கள்

என்ன பேதைமை..?

“ஆமாம்? அவந்திகா எங்கே?. அன்னையே, அவந்திகா, எங்கே? வேடுவர் குடிக்கு இறைச்சி பக்குவம் படிக்கப் போய் இரவு தங்குகிறாளா? அவர்கள் குடில்களில் மதுக்குடங்களுக்கும் பஞ்சமிருக்காது.”

“இல்லை மகளே, அவள் பிள்ளைகளுடன் சென்றிருக்கிறாள். நாளை பிள்ளைகளை அவளே திரும்ப அழைத்து வருவாள். ஒருமுறை ஏமாற்றப்பட்டது அவளால் மறக்க முடியாத வடுவாகி உறுத்திக் கொண்டிருக்கிறது.”

அவந்திகா. நம்பற்குரிய தாய். அரண்மனை, க்ஷத்திரியகுலம், தரும சாத்திரங்கள், எல்லாம் அறிந்தவள். குழந்தைகள் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தீவிரமாக நடப்பாள். இந்த ஆறு, வனம், காயும் பரிதி, வளிமண்டலம், இவை எல்லோருக்கும் பொதுவானவை. கூடித்திரிய ஆண்வாரிசுகள் என்று உரிமையாக்கிக் கொள்ள முடியாது. பூமகள் ஆறுதல் கொண்டு இரவைக் குழப்பமின்றிக் கழிக்கிறாள்.


28

பொழுது ஊக்கமும் உற்சாகமுமாகப் புலருகிறது.

இலைகளும் துளிர்களும் அசையக் கானகமே எழில்முகம் காட்டுகிறது. விதவிதமான வண்ணத்துப்பூச்சிகள் கும்பல் கும்பலாகச் செல்கின்றன. மணவிழாவா? யாருக்கு.? என்று கேட்டுக்கொண்டே நீராடி, வானவனுக்கு நீர்ப்பூசனை செய்கிறாள். சத்தியர் ஒன்றிரண்டு பசுக்களை அவிழ்த்துவிட்டுத் துப்புரவு செய்கிறார்.

நேரம் செல்லச் செல்ல இறுக்கம் மேலிடுகிறது.

பெரியம்மா, “கண்ணம்மா!’ என்று கூப்பிடும் குரலில், மலர் கொய்து கொண்டிருந்த பூமகள் விரைகிறாள்.

துய்மையான நீரால் முகம் துடைத்து, சுத்தம் செய்கிறாள்.