உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

 நாற்பத்தைந்து நிமிடம் காலந்தாழ்த்தி வந்திருக்கிறார். நம் நாட்டின் உரிமையும் நாற்பத்தைந்து நிமிடம் காலந் தாழ்த்தியே வரும்' என்று நகைச் சுவையோடு கண்டித்தார்.

காந்தியடிகள் ஒருமுறை மராட்டிய நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். மிராஜ் என்ற இடத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அதை முடித்துக்கொண்டு உடனே அடுத்த ஊருக்குப் புறப்பட ஆயத்தமானார். ஆனால் மிராஜ் நகரவாசிகள் அடிகளை இன்னும் சிறிதுநேரம் தங்களிடத்தில் தங்க வைக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பினர். ஆனால் அடிகள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தம்முடைய உந்து வண்டி (Car) யைக் கொண்டு வருமாறு கூறினார். 'ஆனால் அவ்வூர் மக்கள் அது பழுதாகிவிட்டது என்று பொய் கூறினர். காந்தியடிகள் தம் அருகில் இருந்த சிலரை 'அடுத்த ஊருக்கு வழி எது?' என்று கேட்டார். அக்குறும்புக்காரர்களும் தவறான வழியைக் காண்பித்து விட்டனர். அடிகளும் அவர்கள் காட்டிய வழியில் நடந்தே புறப்பட்டு விட்டார். அப்போது அவர் காலில் செருப்புகள் கூட அணிவதில்லை.

கோபால கிருஷ்ண கோகலே அடிகளின் அரசியற் குரு. அவர் இறந்தபோது, ஓராண்டு செருப்பணிவதில்லை என்று அடிகள் உறுதி பூண்டிருந்தார்.

அவ்வழி வயற்புறமாக இருந்ததால் அடிகளின் காலில் முட்கள் தைத்தன; குருதியும் கொட்டிற்று.