உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


'இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை' என்றும், 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்-தெய்வத்துள் வைக்கப்படும்' என்றும், 'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்-பிறன்பழிப்பதில்லாயின் நன்று' என்றும் ஆசிரியர் திருவள்ளுவனார் இல்வாழ்க்கையின் மாண்பு தெரிவித்தல் காண்க. 'இல்லற மல்லது நல்லறமன்று' என்று ஔவைப் பிராட்டியார் மிகச் சுருங்கிய சொற்ககளால் பெரும்பொருள் குறித்தல் ஓர்க.

"காந்தியடிகள் இப்பெற்றித்தாய இல்லற நெறி நின்று, வாழ்வு நடாத்தி, எவ்வுயிரையுந் தம்முயிர் போலெண்ணித் தொண்டு செய்யும் பேறு பெற்றிருக்கிறார். இல்லொழுக்கத்தில் காந்தியடிகள் நுழையா திருப்பரேல், உலகுய்ய உழைக்கும் அன்புள்ளத்தை அவர் பெற்றிருப்பாரோ? காந்தியடிகளின் தாய் தந்தையர் இல்லறம் பேணா தொழிந்திருப்பரேல் நம் பெரும் அடிகளை இவ்வுலகம் பெற்றிருக்குமோ? காந்தியடிகளை இவ்வுலகுக்கீந்த இல்வாழ்க்கை ஓங்கி வளர்க; வளர்க. அ ருளாளர் தோன்றுதற்கு நிலைக்களனாக உள்ள இல்வாழ்க்கை ஓங்கி வளர்க; வளர்க."

காந்தியடிகள் தம் வாழ்வின் பிற்பகுதியில் துறவியாகவே வாழ்ந்தார். அதே சமயத்தில் தம் மனைவியாரோடு உள்ளத்தால் ஒன்றுபட்ட உயர் வாழ்வு வாழ்ந்தார். ஆனால் அவருடைய அன்பு இல்லறம் என்னும் எல்லைக்குள் சென்று முடியவில்லை. இதுபற்றித் திரு வி. க. குறிப்பிடும்போது

8