பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


நேரத்தில் மூன்றாம் உலகப் போர் மூளுமோ? என்று உலக மக்களெல்லாம் குலைநடுக்கம் கொண்டிருக்கின்றனர். ஆனால் வல்லரசுகளோ, படைகளையும் படைக் கருவிகளையும் பெருக்குவதன் மூலம் தான் உலகில் போரை ஒழிக்கமுடியும் என்று கூறி வருகின்றன. இப்போக்கு நீடிக்குமானால் மனித இனம் உலகில் பூண்டற்றுப்போகும் என்பது ஒருதலை.

மக்கள் உள்ளத்தில் படிந்திருக்கும் இவ்வறியாமை இருள் நீங்குவதற்கு ஏற்ற அருமருந்தாகக் காந்தியம் விளங்குகிறது. அழிவுப் பாதையில் விரைந்து செல்லும் இவ்வுலகைத் தடுத்து நிறுத்தக் காந்தியத்தால் தான் முடியும். அவர் உலகிற்கு நல்கியுள்ள வய்மை, அருளறம் என்ற இரு கொள்கைகளையும், உலக மக்கள் மதித்து ஏற்றுக் கொள்ளவேண்டும். இக்கொள்கைகளின் சிறப்பை மேலை நாட்டு அரசியல் வாதிகள் உணரவில்லை என்று சொல்ல முடியாது. அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; ஆனால் சொல்லளவில் நின்றுவிடுகிறார்கள்; 'அருளறத்தையும் சமாதானத்தையும் உலகில் நிலை நாட்டப் போகிறோம்' என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள்; மாநாடுகள் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்; ஆனால் வாய்ப்பு நேரும் போது அழிவுப்பாதையில் அஞ்சாமல் ஓடுகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். அதுவரை இவ்வுலகிற்கு மீட்சி இல்லை.