பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

உணர்தல் கூடும். மன்னிக்கும் மாண்பு என் தந்தைக்கு இயல்பாக ஏற்பட்டதன்று. அவர் சினங் கொண்டு கடுஞ்சொல் மொழிவாரென்றும், நெற்றியில் புடைத்துக் கொள்வார் என்றும் எண்ணியிருந்தேன். ஆனால் அவருடைய அமைதி எனக்கு வியப்பை அளித்தது. நான் ஒளியாது என் குற்றத்தை ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பதற்கு உரிய பெரியோரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக் கொள்வதும், இனிமேல் குற்றம் செய்வதில்லை என்று உறுதி மொழி கூறுவதுமே குற்றத்தைப் போக்கிக் கொள்வதற்குச் சிறந்த கழுவாய் ஆகும். நான் எனது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பயனாக என்னைப்பற்றி என் தந்தைக்குக் கவலையே இல்லாமல் போயிற்று. என்னிடம் அவர் கொண்டிருந்த அன்பும் அளவு கடந்து பெருகிற்று.’

மேற் கூறிய அண்ணலின் குற்றங்கள், அது போழ்து அவருக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. ஆனால் அக்குற்றங்களை மறைக்கப் பெற்றோரிடம் பலமுறை பொய் புகல நேர்ந்தது. புலால் உண்டு வீடு திரும்பும் நாட்களில் அன்னை இரா உணவு உண்ண அழைத்தால், ‘பசியில்லை’, ‘வயிறு என்னவோ போல் இருக்கிறது’, ‘நண்பர் வீட்டில் உண்டேன்’ என்றெல்லாம் பொய் கூறுவார். அப் பொய்மையே அவரைப் பெரிதும் வாட்டியது. அப் பொய்மையிலிருந்து நீங்கவே, அடிகள் தீச்செயல்களை விட்டொழித்ததாகக் கூறுகிறார். எனவே, அடிகளை இளமைக் காலத்தில் தீயொழுக்கத்தினின்றும் தடுத்துக் காத்தது வாய்மையே அன்றோ?