உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

மரக்கறி உணவின்பால் பற்றும் உறுதியும் கொண்ட நண்பர் பலர் முட்டை சாப்பிட்டனர். முட்டை சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று காந்தியடிகளும் எண்ணினார். ஆனால் அன்னைக்குத் தாம் அளித்த வாக்குறுதி அவர் உள்ளத்தில் நிழலாடியது. முட்டை அறிஞர்களின் கூற்றுப்படி புலால் உணவில்லாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய அன்னையின் கூற்றுப்படி அது புலால் உணவே. அறிஞரின் கூற்றை மேற்கொண்டு முட்டை உண்டால், அச்செயல் அன்னையிடம் தாம் அளித்த வாக்குறுதியை மீறுவதாகும். அவ்வாக்குறுதியை மீறுவதானது, வாய்மையிலிருந்து தவறுவதாகும். எனவே முட்டை உண்ணும் எண்ணத்தை அவர் தம் உள்ளத்தினின்றும் நீக்கினார். இங்கும் வாய்மையே முன்னின்று காத்தது.

பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ பயிலும் ஆங்கில மாணவர்கள் எல்லாரும் திருமணமாகாதவர்கள். திருமணம் செய்து கொண்டு கல்வி பயிலுவது அந் நாட்டில் காணமுடியாத ஒன்று. மண வாழ்க்கைக்கும் படிப்புக்கும் ஒத்து வராது என்று அங்கே கருதப்படுகிறது. இந்திய நாட்டிலும் பண்டைக் காலத்தில் அவ்வாறே கருதப்பட்டது. மாணாக்கன் ‘பிரம்மசாரி’ என்றே அழைக்கப்பட்டான். பிற்காலத்தில் குழந்தை மணம் தலையெடுக்கத் தொடங்கிய காரணத்தால், மணமானவர்களும் பள்ளியில் சேர்ந்து பயிலவேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கிலாந்து நாட்டுக்குக் கல்வி பயிலச் சென்ற மாணவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும், பொதுவாகத் திருமணமாக-