உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

சென்ற காட்சி கரம்சந்திர காந்தியின் இளம் உள்ளத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. ‘பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் இப்படியல்லவா தொண்டு செய்ய வேண்டும்?’ என்று உளத்தில் தீர்மானித்துக் கொண்டார்.

அவர் பார்த்த மற்றொரு நாடகம் அரிச்சந்திர நாடகம். அதை எத்தனை முறை பார்த்தாலும் மோகனதாசுக்குச் சலிப்புத் தட்டுவதே இல்லையாம். ‘அரிச்சந்திரனைப்போல் ஏன் எல்லாரும் வாய்மையாளராக இருக்கக்கூடாது?’ என்று அடிக்கடி எண்ணமிடுவாராம். அரிச்சந்திரன் கதையை நினைத்து நினைத்து மனமுருகி அழுவாராம். சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக அரிச்சந்திரன் பட்ட துன்பங்களையெல்லாம் தாமும் துய்க்க வேண்டும் என்ற இலட்சியம் குழந்தை காந்தியின் உள்ளத்தில் குடிகொண்டதாம்.

ஆகா! அக்குறிக்கோள் காந்தியடிகளின் வாழ்க்கையில் எவ்வளவு நன்றாக நிறைவேறி முற்றுப் பெற்றுவிட்டது! அரிச்சந்திரன் சத்தியத்துக்காகச் செய்த தியாகங்களையும் பட்ட இன்னல்களையும்விட, மகாத்மா செய்த தியாகங்களும் பட்ட இன்னல்களும் குறைந்தவை அல்ல என்று உறுதியாகக் கூறலாம். அரிச்சந்திரன் மனைவி மக்களைப் பிரிந்தான் ; புலையனுக்கு அடிமைப்பட்டான். ஆனால் காந்தியண்ணலோ சத்தியத்திற்காக உயிரையும் கொடுத்தார்.

காந்தியடிகள் வாய்மைக்குக் கொண்ட பொருளும், அதைத் தம் வாழ்க்கையில் மேற்கொண்ட