உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

காது மூடியா?’ என்று கேலி செய்வார்கள். ஆனால் அக் குல்லாய் ‘வாய்மையின் அறிகுறி’ என்று அடிகள் விளக்கம் தந்தார். வண்ணக் குல்லாய்களை யணிந்தால், அதில் படியும் அழுக்குத் தெரியாது. அதே போலப் பொய்மை படிந்த உள்ளத்தவரும், வாய்மையாளராக வெளியில் தென்படுவர். வெள்ளைக் குல்லாயில் சிறிது அழுக்குப் படிந்தாலும் பளிச் சென்று தெரியும். உடனே அவ்வழுக்கைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும்; அதே போல வாய்மையாளர், தம் உள்ளத்தில் சிறிது பொய்ம யழுக்குப் படிந் தாலும் உடனே போக்கிக் கொள்வர்.

காந்தியடிகள் ‘கதர்ப் பிரசாரம்’ செய்வதற்காக ஒரு முறை தமிழ் நாடு போந்தார். மதுரையில் தங்கியிருந்தபோது, பலரும் அவரைக் காண வந்தனர். வந்தவர்களில் ஒரு நண்பர் வெளிநாட்டுத் துணியை அணிந்திருந்தார். நண்பரின் செயல் காந்தியடிகள் உள்ளத்தை உறுத்தியது. தாம் மேற்கொண்ட ‘கதர்ப் பிரசாரம்’ எதிர்பார்த்த அளவு பயன் விளைக்கவில்லை என்பதை உணர்ந்தார். அந் நண்பரைப் பார்த்து, ‘நீர் என்னைப் பார்க்கவந்து என்ன பயன்? கதர் உடுக்காமல் வந்திருக்கிறீரே!’ என்று அடிகள் வினவினார். ஆனால் அந்நண்பரோ, கதர் கிடைக்கவில்லை என்று கூறினார். இவ்விடை அடிகளின் உள்ளத்தைச் சிந்தனையில் சாய்த்தது. கதரின் பற்றாக்குறையைப் போக்கத் தம்முடைய ஆடையை இன்னும் குறைத்துக் கொள்ள விரும்பினார்.