பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

தென்னாப்பிரிக்க வாழ்க்கையில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்; கெழுதகை நண்பர்; காந்தியடிகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்த காலத்தில் உடனிருந்து காத்தவர்; பெரு வணிகர். வெளி நாட்டிலிருந்து கள்ளத்தனமாகச் சரக்குகளை இறக்குமதி செய்தார் என்று தென்னாப்பிரிக்க அரசாங்கம் அவர்மேல் ஒரு வழக்குப் பதிவு செய்திருந்தது; ரஸ்டம்ஜி அடிகளின் உதவியை நாடினார். ஆனால் காந்தியடிகள் மனச்சாட்சி அவ்வழக்கை ஏற்று நடத்த இடம் தரவில்லை. அக்குற்றத்தை ஏற்றுக் கொண்டு அரசியலாரிடம் மன்னிப்புப் பெறுதலே அறம் என்பதை அடிகள் ரஸ்டம்ஜிக்கு வற்புறுத்தினார். அதற்குத் தாமே துணை புரிவதாகச் சொன்னார். சுங்கத் துறைத் தலைவரை நேரில் கண்டு, நிலைமையை எடுத்துக் கூறி மன்னிப்பும் வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு அண்ணலின் செயல்கள் யாவும் “வாய்மை! வாய்மை!” என்றே முழக்கமிட்டன. அதனாற்றான் பெருநாவலர் அருளிச் செய்த,

“உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து செல்லாம் உளன்”

என்ற அருங்குறளுக்கு, அண்ணல் இலக்கியமாக விளங்க முடிந்தது.