பக்கம்:வழிப்போக்கன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128


என் மாமனார், மாமியார், குழந்தை சாரதா மூவரும் ஆற்காட்டில் இருப்பதாக எழுதியிருந்தாய். ரொம்ப சந்தோஷம். அவர்களைப் பார்க்க மிகவும் ஆவலாயிருக்கிறேன். முடியுமானால் ராணிப்பேட்டைக்கு வண்டி அனுப்பவும். எல்லா விவரங்களையும் நேரில் விவரமாகச் சொல்லுகிறேன்.

இப்படிக்கு.
காமு."


"தாத்தா, நாளைக்கு காமு, சுந்தர் எல்லோரும் குடும்பத்தோடு இங்கு வருகிறார்களாம். ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்பச் சொல்லி கடிதம் எழுதியிருக்கிறாள் காமு!" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள் சகுந்தலா.

"அப்படியா காமுவுக்கு நன்றாகக் குணமாகிவிட்டதாமா? ரொம்ப சந்தோஷம். இங்கே வருவதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும் என்று முன் கடிதத்தில் எழுதியிருந்தார்களே!... கங்காதரய்யரை எங்கே காணோம்?" என்று கேட்டார் சர்மா.

"அவர் கடைத்தெருவுக்குப் போயிருக்கிறார்."

"சரி; சுந்தரின் அம்மாவிடம் போய்ச் சொல்லு. இதோ பார்த்தாயா? இந்தக் கவர் உன் அப்பா எழுதி வைத்திருக்கிறார். இதில் உனக்கும் ஒரு கடிதம் எழுதி வைத்திருக்கிறார். ரொம்ப முக்கியமான விஷயம் இருக்கிறது இதில். படித்துப் பார். சந்தோஷப்படுவாய்" என்று கூறி கடிதத்தைச் சகுந்தலாவிடம் கொடுத்தார் சர்மா.

அதைப் படித்த சகுந்தலாவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

"தாத்தா, நாளைக்கு நானே ராணிப்பேட்டை ஸ்டேஷனுக்குப் போய் அவர்களை அழைத்து வரப்போகிறேன்" என்றாள் சகுந்தலா.

"வண்டியில் அத்தனை பேருக்கும் இடம் இருக்குமா? சாமான்களொல்லாம் வருமே! என்று கூறினார் சர்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/128&oldid=1322818" இலிருந்து மீள்விக்கப்பட்டது