பக்கம்:வழிப்போக்கன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சுந்தரின் மாய உருவத்தை மறக்கும் நோக்குடன் அவள் கீழே இறங்கித் தோட்டத்தின் பக்கம் சென்றாள். அங்கே அவன் அந்த இருட்டறையில் வழுக்கி விழுந்ததும், அதைக் கண்டு தான் சிரித்ததும் புகைப் புலனாகக் காட்சி அளித்தது.

சகுந்தலா அந்த அறைக்குள் சென்று பார்த்தாள். அங்கு சுந்தர் வைத்து விட்டுப் போயிருந்த சோப்புப் பெட்டி அப்படியே கிடந்தது. அதிலிருந்த சந்தன சோப்பின் மணத்தை நுக்ரு ம்போது அவளுடைய கண்கள் ஏன் அப்படிச் சொக்கிச் சுழல்கின்றன?

‘விடுமுறை கழிந்து சுந்தர் ஆற்காட்டுக்குத் திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகுமே! அது வரை இந்த வீட்டில் எப்படித் தனியாக இருப்பேன்?’...சகுந்தலாவின் இதயத்திலிருந்து ஒரு கனத்த பெருமூச்சு வெளிப்பட்டது.

மாலைப் பொழுது மயங்கும் நேரத்தில், வாசல் வராந்தாவில் விளக்கைக் கொண்டுபோய் வைப்பதற்காகச் சென்றாள் சகுந்தலா. அப்போது சுந்தருடைய பள்ளித் தோழன் சாமிநாதன் அங்கே தயங்கியவாறுநின்றுகொண்டிருப்பதைக் கண்ட அவள், “சுந்தர் ஊரில் இல்லையே, வருவதற்கு ஒரு மாதம் ஆகும்” என்றாள்.

“சுந்தர் பெயிலாயிட்டான்; பள்ளிக்கூடத்திலே இன்றைக்குத்தான் ‘ரிசல்ட்’ போட்டிருக்கிறார்கள். பாஸ் செய்தவர்கள் பெயர்களையெல்லாம் போர்டிலே போட்டிருக்கிறார்கள். அதில் சுந்தர் பெயரைக் காணோம். இதைச் சொல்லி விட்டுப் போகத் தான் வந்தேன்!” என்றான் அவன்.

அப்போது தான் மண்டியிலிருந்து வந்து கொண்டிருந்த சர்மா, “பெயிலாகிவிட்டான் அல்லவா? ரொம்ப சரி; எனக்கு அப்பவே தெரியும். எந்நேரமும் வாசகசாலை, இல்லாவிட்டால் டிராயிங், எப்படிப் பாஸ் பண்ண முடியும்? இருக்கட்டும், நாளைக்கே மாங்குடிக்குக் கடிதம் எழுதிப் போடுகிறேன். மேற்கொண்டு படிக்க போகிறானோ இல்லையோ?” என்று கூறிக் கொண்டே உள்ளே போய்விட்டார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/42&oldid=1306867" இலிருந்து மீள்விக்கப்பட்டது