பக்கம்:வழிப்போக்கன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

“வேண்டாம் மாமா, நான் பட்டணத்துக்குப் போகலாம் என்று இருக்கிறேன். அதற்காகத் தங்களுடைய உத்தரவைப் பெற்றுப்போகவே வந்திருக்கிறேன்.”

“பட்டணத்துக்கா? உன் அப்பா சரி என்று சொன்னாரா?”

“உங்கள் அபிப்பிராயப்படி செய்யச் சொல்லி அனுப்பியிருக்கிறார்.”

“பட்டணம் போய் என்ன செய்யப் போகிறாய்?”

“ஒரு நல்ல வேலை கிடைக்கிறவரை விளம்பர போர்டு எழுதிச் சம்பாதிக்கலாமென்று இருக்கிறேன்”

“அதற்கெல்லாம் அனுபவம் வேண்டுமே! உனக்கு போர்டு எழுதத் தெரியுமா?”

“தெரியும்; ஆற்காட்டி”ல்கூட ஒரு சோடா பாக்டரிக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன்!

“சரி; உனக்குத் தைரியமிருந்தால் புறப்பட்டுப் போ! பத்தாவது வரையே படித்தாலும் என்ன வேலை கிடைத்து விடப் போகிறது? இப்படி ஒரு கைத்தொழிலைப் பழகிக் கொள்வது நல்லதுதான். ஆமாம்; ஒரு தொழிலில் புகுந்து அதில் நிரந்தர வருமானம் வருகிறவரை ரொம்பக் கஷ்டப் படுவாயே, அதுவரை பணத்துக்கு என்ன செய்யப் போறாய்? ”

“இன்றைக்கு லட்சாதிபதிகளாக இருப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் பட்டணத்துக்கு வெறுங்கையுடன் போனவர்கள்தான். என் கையிலாவது ஒரு பிரஷ் இருக்கிறது. மேயப் போகிற மாடு தலையில் புல்லைக் கட்டிக்கொண்டா போகிறது எப்படியோ சமாளித்துக் கொள்வேன். எனக்குத் தைரியம் உண்டு. பிறர் உதவியை எத்தனை நாட்களுக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கக் முடியும்? நானே என் கால்களை ஊன்றி நிற்க பார்க்கிறேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/45&oldid=1306807" இலிருந்து மீள்விக்கப்பட்டது