உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 101

'வாடக்கண் துயிலாமல் இருந்தான் வேலன்;
மலர்ந்திட்ட காலையிலும் அவளைக் கண்டான்.

—பாண்டியன் பரிசு: இயல், 76, 8.


வருணிக்கும் போக்கில் அப்பொருளை நம் கண் முன்னர் அப்படியே கொண்டு வந்து காட்டுதல் கவிஞரின் தனித்திறனாகும். சான்றாகச் 'சஞ்சீவி பர்வதத்தின் சார'லின் தொடக்கத்தினைக் காண்க:

குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த
 மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்
ஊற்றுகள் உண்டு; கனிமரங்கள் மிக உண்டு;
பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதேன்
ஈக்கள் இருந்தபடி இன்னிசைபாடிக் களிக்கும்;
வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு;
காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு:
நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார்.

இதுபோன்றே எதிர்பாராத முத்தத்தில் கதைத் தலைவி பெண்ணழகி பூங்கோதை —வள்ளியூர் மறை நாய்கன் வீட்டுப் புள்ளிமான் —நீலப் பூவிழி நிலத்தை நோக்க, கோலச் சிற்றிடை கொடிபோல் துவள, நிறப் பட்டாடை காற்றில் நெகிழ, பாதச் சிலம்பு பாட, நிலா முகம் சீதளம் சிந்த, செவ்விதழ் மின்ன, செப்புக் குடத்தில் இடக்கை சேர்த்து, அப்படியிப்படி வலக்கை அசைத்து, அன்னப்பேடுபோலத் தண்ணீர்த் துறைக்குச் சென்றாள்,' என்று எழிலுற வருணித்துள்ளார்.

காதல் வாழ்வு, குறித்து வசனகவிதை போன்று பாவேந்தர் எழுதியுள்ளவை சிந்தையை மகிழ்வித்துக் கருத்தைக் கவர வல்லனவாகும். அவற்றில் இரு பகுதிகள் காதலின் ஆழத்தைக் காட்டுவனவாயுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/103&oldid=1461277" இலிருந்து மீள்விக்கப்பட்டது