பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உறவினர் எதற்கு?

“அவனன்றி ஓரணுவும் அசையாது!” என்கிறார்கள். அப்படியானால், இந்த அகண்டாகார உலகத்தில் அவ்வப்போது நடக்கும் அநீதி, அக்கிரமங்களுக்கெல்லாம் அவனே ஜவாப்தாரியாகிறான் அல்லவா? ஆனால், தண்டனை மட்டும் அவனுக்கு இல்லையாம்; அவனால் ஏவப்பட்ட மனிதர்களுக்குத் தானாம்! - இதென்ன வேடிக்கை! - இப்படி அதிசயத்துக்கு ஆளாகி, ஆண்டவனைப் பற்றி ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்களுக்குக் கிடைக்கும் பதில் இதுதான்:

“அவனுடைய லீலா விநோதங்கள் அற்பர்களாகிய நமக்குப் புரியாதவை!”

அது எப்படியாவது போகட்டும்; ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அந்த ஆபத்பாந்தவனின் அறிய முடியாத தத்துவம் எனக்கு புரிகிறது. அதாவது பணக்காரனுக்கு மேலும் மேலும் பணம்; பணமில்லாதவனுக்கு மேலும் மேலும் பிள்ளை!

இரண்டாவது விஷயத்தில்தான் பகவானுடைய அருள் எனக்குப் பரிபூரணமாக கிடைத்திருக்கிறது. அதாவது பெண்ணாய்ப் பிறந்த நாலு ஜீவன்கள் என்றும் அல்லும் பகலும் ‘அப்பா! அப்பா!’ என்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அந்த நாளில் நான் மணக்கோலம் பூண்டிருந்த போது எனக்குச் சகல செளபாக்கியங்களும் வாய்க்கட்டும் என்று ஆசீர்வசித்த பெரியோர்களின் வாக்கு இந்த முறையில்தானா பலிக்க வேண்டும்?

என்னமோ, இந்த ஒரு பாக்கியமாவது, எனக்குக் கிடைத்ததே என்று என்னை ஆசீர்வதித்த பெரியோர்கள் வேண்டுமானால் சந்தோஷமடையலாம். நான் சந்தோஷமடைய முடியுமா?

எல்லோருடைய வீட்டிலும் பிறக்கும் குழந்தைகள் அத்தனையும் உயிருடன் இருந்து விடுவதில்லை; ஓரிரண்டு செத்துப் போவதுண்டு. எனக்கு வேறு என்ன பாக்கியம் வைக்காமற் போனாலும், ஆண்டவன் அந்தத் துர்ப்பாக்கியத்தை மட்டும் வைக்கவில்லை.

இந்த உலகத்தில் எனக்காக இரங்கிய ஜீவன் ஏதாவது உண்டா என்றால், அது என் மனைவிதான். நாலு பெண்களைப் பெற்று