பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரே உரிமை

119

 “ஓஹோ-சரி, நான் ஒன்று சொல்கிறேன். கேட்கிறாயா?”

“கேட்காம என்னங்க?”

“இந்த அறுவடை வேலை முடிந்ததும் நீ வேலை வெட்டி கிடைக்கவில்லையே என்று பழையபடி எச்சில் இலைக்கு நாயுடன் வந்து நிற்காதே! நான் உனக்கு ஒரு கடை வைத்துத் தருகிறேன்”.

“என்ன கடைங்க?”

“ரொட்டி, மிட்டாய் எல்லாம் லாபத்துக்கு வாங்கி விற்கிறது....”

“ஐயய்யோ! இதென்ன கூத்துங்க! எங்கேயாச்சும் பறப் பயல்...... ”

“என்னடா, அப்படிச் சொல்கிறாயே! அதெல்லாம் அந்தக் காலம். இப்போது பார்த்தாயா, உங்களுக்குக் கோயிலைத் திறந்து விடுகிறார்கள்!”

“ஆமாம், ஆமாம். அன்னிக்குக் கூட அங்கே எங்கேயோ கோயிலைத் திறந்து விடறாங்கன்னு ‘தர்மகர்த்தா ஐயா வந்து என்னைக் கூப்பிட்டாரு. எப்பவோ ஒரு நாளைக்கு அபூர்வமாக் கெடச்ச வேலையை விட்டுட்டு நான் எங்கே கோயிலுக்குப் போறது, சாமி? அந்த வேலையே எனக்கு அப்போ சாமி மாதிரி இருந்தது; தினந்தினம் அதன் தரிசனம் கெடைச்சாத்தானே எங்க வயிற்றுக்குக் கஞ்சி? அதாலே இன்னொரு நாளைக்குக் கோயிலைப் பார்த்துக்கலாம்னு நான் போகலே அது சரி, சாமி அதற்குத்தான் காந்தி என்னமோ சொன்னாராமே......!”

“என்ன சொன்னாராம்?”

“ஹரிஜனங்களுக்குக் கோயிலைத் திறந்து விட்டா மட்டும் போதாது; இத்தனை நாளா அவங்களை ஒதுக்கி வச்ச ஒசந்த சாதியாரு இன்னும் அவங்களுக்கு எவ்வளவோ செய்யணும்னு!”

“அதற்காகத்தான் நான் உனக்கு இந்த உபகாரம் செய்கிறேன் என்கிறேன்.......”

“என்னமோ செய்யுங்க, சாமி!”

“சரி, நான் பட்டணத்துக்குப் போகுமுன் உனக்கு அந்தக் கடையை வைத்துக் கொடுத்துவிட்டுப் போகிறேன், போ!” என்றேன்.

அவன் போய்விட்டான்.

***