பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மனக் குறை

155

நேற்றுவரை அவனும் தன்னைப்போல் வாடகை குடித்தனம் செய்துகொண்டு வந்தவன்தான், இன்று.....?

‘ஜாம், ஜாம்’ என்று தன்னுடைய சொந்த வீட்டில்- சகல செளகரியங்களும் பொருந்திய புத்தம் புது வீட்டில்-அவன்குடித்தனம் செய்யப் போகிறான்!

பார்க்கப் போனால் இதற்காக அவன் செய்ததுதான் என்ன?-ஒன்றுமில்லை. தனக்கு வீடு தேவையாயிருப்பதால் உடனே காலி செய்து கொடுக்க வேண்டுமென்று வீட்டுக்காரன் அவனுக்கு மூன்று மாத ‘நோட்டீஸ்' கொடுத்தானாம். இந்த விஷயத்தை அவனுடைய வேட்டகத்தார் கேள்விப்பட்டார்கள். அதன் பலன்?

மூன்று மாதத்திற்கெல்லாம் தன்னுடைய சொந்தச் செலவிலேயே ஒரு அழகான வீட்டைக் கட்டி முடித்து, அதை அவன் பேரிலேயே எழுதி வைத்து விட்டார் மாமனார்! -கொடுத்து வைத்தாலும் இப்படியல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்?

உம்.....உலகத்தில் எத்தனையோ பேருக்கு இப்படியெல்லாம் நடக்கிறது. தனக்கோ.....?

தன்னைவிட 'தரித்திரம்'தான் ஒன்று வந்து வாய்த்திருக்கிறது!

மாற்றிக் கட்டிக் கொள்ள மறு புடவைக்கு வழி கிடையாதாம் - அவளும் வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறாளே!

"எனக்கும் கல்யாணமாகி ஏழு வருஷமாகிறது. இதுவரை நான் என் மனைவிக்குப் புடவையோ, ஜாக்கெட்டோ-ஒன்றும் எடுத்துக் கொடுத்தது கிடையாது. இன்று வரை அவள் கட்டுவதெல்லாம் அவளுடைய அப்பா எடுத்துக் கொடுத்ததுதான்!” என்று சொல்லி: அன்று ஹரிதன்னிடம் என்னமாய்ப் பெருமையடித்துக் கொண்டான்!

இங்கே என்னடா என்றால் எல்லாவற்றுக்கும் தன்னுடைய கழுத்தை அறுப்பதற்காக வந்து தொலைந்திருக்கிறதே!-எல்லாம் என் தலையெழுத்து!

உம்....... தலையெழுத்தாவது மண்ணாங் கட்டியாவது!-அவன் முன்யோசனையோடு நல்ல இடமாகப் பார்த்துக்கல்யாணம் செய்து கொண்டான்; அதிர்ஷ்டமும் தானே கதறிக் கொண்டு அவனை வந்து சேர்ந்தது.

நானோ....?