பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாருக்குப் பிரதிநிதி?

191


“என்னசாமி, இப்படிச் சொல்றீங்க? 'நீங்க எங்க பிரதிநிதி, எங்க பக்கமாப் பேசத்தான் மேலிடத்துக்குப் போயிருக்கீங்க'ன்னு கோடி வீட்டு ஐயா சொன்னாரே! உங்க பேச்சைப் பார்த்தா நீங்க 'யாருக்குப் பிரதிநிதி'ன்னு தெரியலைங்களே!" என்றான் குப்பன் வியப்புடன்.

அவ்வளவுதான்; ஸ்ரீமான் அன்னவிசாரத்துக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்துவிட்டது. அவர் படுக்கையை விட்டுத் தடாலென்று கீழே குதித்தார். குப்பனுக்கு நேராகச் சென்று ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு, "அடேய், அதிகப் பிரசங்கி நான் யாருக்குப் பிரதிநிதி என்றா கேட்கிறாய்? சொல்கிறேன், கேட்டுக் கொள்; நான் எனக்குப் பிரதிநிதி; என் மனைவிக்குப் பிரதிநிதி, என் மக்களுக்குப் பிரதிநிதி; என் வீட்டுக்குப் பிரதிநிதி உனக்குப் பிரதிநிதி இல்லை; உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதி இல்லை, போ!" என்று கத்தி விட்டுக் குளிக்கும் அறையை நோக்கி 'மந்திரி நடை' நடந்து சென்றார்.

"அப்படிப் போடுங்கள், ஒரு போடு! அடுத்த ‘எலெக்ஷன்' வரும் வரைதான் நமக்குக் கவலையில்லையே! என்று தன் பதி சொன்னதை அப்படியே ஆமோதித்தாள் அவருடைய சதி.