பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலைக்காரி விசாலம்

211


அனந்தகிருஷ்ணன் அவளைக் கவனிக்கவில்லை. சேகரனை மீண்டும் வண்டியில் ஏற்றிவிட்டு, தானே வண்டியைத் தள்ள ஆரம்பித்தாள்.

‘பாம் பாம், பாம், பாம்!’ என்று பங்களாவுக்கு வரும் பாதையிலிருந்து மோட்டார் ஹார்ன் சத்தம் கேட்டது-ஆமாம்; விசாலம் எதிர்பார்த்தபடி எஜமான் தான் அந்தக் காரில் வந்து கொண்டிருந்தார்.

கதிகலங்கிப் போய் விட்டாள் விசாலம்.

கடைசியில் என்ன?-எஜமான் அந்த அநீதியை-அக்கிரமத்தைப் பார்த்தே விட்டார்! சேகரன் வண்டியில் ஏறிக் கொண்டிருப்பதையும், தம்முடைய குழந்தை வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்வதையும்தான்!

என்ன கர்வம், இவளுக்கு தள்ளு வண்டியில் தன் பிள்ளையை உட்கார வைத்ததோடு இல்லாமல், அனந்த கிருஷ்ணனை விட்டு அல்லவா வண்டியைத் தள்ளச் சொல்லியிருக்கிறாள்!

"ஏய்!"-ஆமாம்; இது எஜமானின் அதிகாரப்பூர்வமான அழைப்பு! உழைப்பைப் பெற்றுக் கொண்டு ஊதியம் கொடுக்கும் அவனுக்கு, அவள் சுயமரியாதையையும் தத்தம் செய்துவிட வேண்டும்!

விசாலத்தின் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன. கார் நிறுத்தப்பட்டது.

விசால் பயபக்தியுடன் வந்து நின்றாள். "மன்னிச்சுடுங்கோ!" என்ற வார்த்தை அவள் வாயிலிருந்து ஒவ்வொரு அக்ஷரமாகத் தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

எஜமானின் விழிகள் அப்படியும் இப்படியுமாக ஒரு நிமிஷம் உருண்டன. மறு நிமிஷம் ஒரு நீண்ட பெருமூச்சு; கடைசியில் ‘உம்’ என்ற ஒரு பயங்கர உறுமல்; கார்கிளம்பி விட்டது.

‘அப்பாடி!' என்று விசாலம் 'விடுவிடு' வென்று தள்ளு வண்டி சென்ற திக்கை நோக்கி நடந்தாள். வண்டியில் உட்கார்ந்திருந்த சேகரனின் இரு கன்னத்திலும் இரண்டு அறைகள் வைத்தாள். குழந்தை 'வீல்' என்று கத்தினான்; துடியாய்த் துடித்துப் போனான்; ‘அம்மா! அம்மா!’’ என்று அலறினான். ஆனாலும் அவள் மனம் இரங்கவில்லை-கூலிப் பிழைப்பை விடவா குழந்தை?