பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கிளி பேசுகிறது!

ந்த பங்களாவைச் சுற்றிலும் பெரிய தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் எத்தனையோ விதவிதமான மரங்கள், செடிகள், கொடிகள்! இலைகளில்தான் எத்தனை யெத்தனை வகைகள்; மலர்களில்தான் எத்தனை யெத்தனை நிறங்கள்; மணங்களில்தான் எத்தனை யெத்தனை விதங்கள்; கனிகளில்தான் எத்தனை யெத்தனை சுவைகள் அம்மம்மா! அவற்றின் அழகை மனதினால்தான் உணர முடியுமே தவிர, வாயினால் விவரிக்க முடியாது.

எல்லோருக்கும் பொதுவாக இயற்கை அளிக்கும் அந்தச் செல்வத்தை பங்களாவில் குடியிருந்த ஒரு சிலர்மட்டும் ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தங்களைப் போன்ற மனிதர்களைத்தான் அவற்றை அனுபவிக்க முடியாதபடி அவர்களால் தடுக்க முடிந்ததே தவிர, எங்களைப் போன்ற புள்ளினங்களை அவ்வாறு தடுக்க முடியவில்லை.

அந்தத் தோட்டம் அவர்களுக்குச் சொந்தமாயிருக்கலாம்; அதன் மூலம் இயற்கை அளிக்கும் செல்வம் அனைத்தையும் அவர்களே அனுபவிப்பதற்கு உரிமையிருக்கலாம்; அந்த உரிமையும் சொந்தமும் எங்களுக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் எங்களுடைய தயவு அவர்களுக்கு இல்லை யென்றால், அந்த இயற்கைச் செல்வத்தில் கொஞ்சமாவது அவர்கள் அனுபவிக்க முடியுமா?

யாருடைய அனுமதியுமின்றி என் தாயும் நானும் அந்தத் தோட்டத்திலிருந்த ஒரு மாமரப் பொந்தில் வசித்து வந்தோம். எங்களுக்கு அரசன் கிடையாது; சட்டம் கிடையாது; தண்டனையும் கிடையாது,

நாங்கள் அடிமைகளாயிருக்கவுமில்லை; விடுதலை கோரவும் இல்லை.

நாடு எங்களுடையது; காடு எங்களுடையது; கடல் எங்களுடையது, வானம் எங்களுடையது; மலைகள் நதிகளெல்லாம் எங்களுடையவை; மரம், செடி, கொடி எல்லாமே எங்களுடையவைதான்.

‘என்னுடையது’ என்று நாங்கள் எதையுமே சொல்லிக் கொள்வதில்லை; எல்லைக்கோடு வகுத்துக் கொள்வதில்லை;