பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முல்லைக் கொடியாள்

19

"பின் எதற்காகத்தான் இங்கு வந்தாய்?”

“அதைச் சொல்லத்தான்" "சொல்லேன்" என்றேன் நான்.

"ஊஹாம்” என்று மயிலின் சாயலோடு அவள் தன் தலையை அசைத்தாள். அதே சமயத்தில் முல்லை பந்தலின்மேல் உட்கார்ந்திருந்த ஒரு மைனா, கூஹாம் என்று அவனை நையாண்டி செய்துகொண்டே பறந்து சென்றது.

அழகும், ஆசையும்கூட ஒருவிதமான லாகிரிதானே? அவற்றை அனுபவிக்க எனக்கு ஒருவிதமான போதை எழுந்தது. இருந்தாலும் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு பேசாமலிருந்தேன்.

அவளே சிறிது நேரத்திற்குப் பிறகு ‘இது தெரியாதா, உங்களுக்கு? அவர்கள் திருநாளுக்குப் போயிருக்கிறார்கள்’ என்றாள்.

“எப்பொழுது வருவார்கள்?" என்று கேட்டேன். "நாளைக்கு" "அட, ராமா கதவைத் திறந்து வைத்துவிட்டாவது போயிருக்கக் கூடாதா? - இப்போது நான் எங்கே போவது?" என்றபடி, ஒன்றும் தோன்றாமல் நான் வந்த வழியே திரும்பினேன்.

அவள், “எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டாள். "தெரியவில்லை" என்றேன். "பைத்தியம்தான்; எங்கள் வீட்டுக்கு வாருங்கள்" என்றாள். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமலிருக்க அவள் சொல்வது போல் எனக்கென்ன பைத்தியமா) சென்றேன். எனக்கு முன்னால் அவள் திடுதிடு வென்று ஓடி உள்ளேயிருந்து ஒரு சொம்பு தண்ணிர் கொண்டு வந்து "காலை அலம்பிக் கொள்ளுங்கள்" என்றாள்.

அதை வாங்கிக் கொண்டு நான் வாசலுக்கு வந்தேன். "அது யார், அம்மா?" என்று உள்ளே இருந்தபடி யாரோ கேட்டது என் காதில் விழுந்தது.

"எதிர்த்த வீட்டு அண்ணியின் அண்ணா, ஊரிலிருந்து வந்திருக்கிறார்" என்று சொன்னாள் அவள்.

"ஐயோ, பாவம் அவர்கள் திருநாளுக்குப் போயிருப்பது தம்பிக்குத் தெரியாது போலிருக்கிறது. முதலில் அவனுக்குச்சாப்பாடு போடு அம்மா எப்பொழுது சாப்பிட்டு வந்ததோ, என்னமோ?"