பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

விந்தன் கதைகள்

 திருவாளர் ஏகாம்பரம் அவர்களுக்கு எங்கள் வட்டாரத்தைச் சீர்திருத்த வேண்டுமென்பதில் இருந்த ஆர்வம் கொஞ்சநஞ்சமல்ல. அந்த ஆர்வத்தை என்னுடன் பேச நேரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் காட்டிக் கொள்ளத் தவற மாட்டார்.

தினந்தோறும் நான் கடைக்குச் செல்லும் வழியில் தான் அவருடைய வீடு இருந்தது. அவர் வசித்து வந்த தெருவைக் கடக்கும்வரை யாரும் மூக்கைப் பிடித்துக் கொள்ளாமல் செல்ல முடியாது. காரணம், அந்தத் தெருவில் பூமிக்குக் கீழே செல்ல வேண்டிய சாக்கடைக் கால்வாய்களெல்லாம் மேலே சென்று கொண்டிருந்ததுதான்.

இதேமாதிரி இன்னும் எத்தனையோ தெருக்கள் எங்கள் வட்டாரத்தில் இருந்தன. வீட்டுக்கு வீடு ஒரு நாள் கடைக் கால்வாய் கிளம்பி எதிரேயிருக்கும் மைதானத்தை நோக்கி மெளனமாகச் செல்லும் காட்சியையும் கொசுக்கள் தங்களுடைய ரீங்காரத்தின் மூலம் அவற்றின் மெளனத்தைக் கலைத்து மகிழும் காட்சியையும் எங்கள் வட்டாரத்தைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்து நடை முறையில் இருந்துவரும் இந்த அதிசயத்தை எண்ணி வியந்த வண்ணம் மேலே சென்றால், தெருக் கோடியில் இருக்கும் சென்னை நகரசபையாரின் போர்டு, தெருவை அசுத்தம் செய்யாதே; அசுத்தமே வியாதிக்குக் காரணம்’ என்று நம்மை எச்சரிக்கும். இந்த எச்சரிக்கையைக் கண்டு சிரித்தால் எதிரே ஏகாம்பரம் தோன்றி "என்ன ஸார், சிரிக்கிறீர்கள்?" என்று கேட்பார்.

"ஒன்றுமில்லை; இந்தத் தெருவை இவ்வளவு அழகாக வைத்துக் கொண்டு 'அசுத்தம் செய்யாதே!' ஒன்று கார்ப்பொரேஷன்காரர்கள் நம்மை எச்சரிக்கிறார்களே என்று நினைத்தேன் சிரிப்பு வந்துவிட்டது" என்பேன்.

"அதற்குத்தானே ஸார், இரண்டு வருஷங்களாக நான் கரடியாய்க் கத்திக் கொண்டு வருகிறேன் - எனக்கு உங்கள் வோட்டைப் போடுங்கள் ஐயா, இதையெல்லாம் வெளுத்துக் கட்டிவிடுகிறேன் என்று யாராவது கேட்டால் தானே?" என்பார்.

பாவம், இரண்டு வருஷங்களாக நகரசபைத் தேர்தலில் நின்று, தாம் தோல்வியடைந்து விட்டதைத்தான் அவர் அடிக்கடி மேற்கண்டவாறு குறிப்பிடுவது வழக்கம்.

* * *