பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

விந்தன் கதைகள்


சமயத்தில் வேலையில்லாதவர்களை முதலாளிகள் எங்களுக்குப் போட்டியாக வேலைக்கு அமர்த்திக் கொள்ள முயற்சி செய்வார்கள். அவர்களும் 'சும்மா இருப்பதற்குப் பதிலாக கிடைத்தவரை கிடைக்கட்டுமே' என்று வேலை செய்ய வருவார்கள். நாங்கள் அந்தக் கருங்காலிகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? - எங்களுக்கும் பசி, அவர்களுக்கும் பசி! - பசியோடு பசி மோத வேண்டியதுதானே? - சண்டை பிரமாதமாக நடக்கும்; முதலாளியின் பாடு குஷிதான்!”

‘என்ன சொன்னாய்? பசியா’ என்று நீக்ரோ அதுவரை கேள்விப்படாத ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டவன் போல் துள்ளியெழுந்து நின்று கேட்டான்.

“ஆமாம், பசிதான்!” என்றான் இந்தியன்.

“அதைப்பற்றி நீ கவலைப்பட்டதுண்டா, என்ன?”

"நல்ல கேள்வி கேட்கிறாய், ஐயா! அந்தப் பாழும் பசியைப் பற்றித் தான் என்னைப் போன்றவர்களுக்கு அல்லும் பகலும் அங்கே கவலை!" என்றான் இந்தியன்.

“நிஜமாகவா சொல்கிறாய்?”

"பின்னே பொய்யா சொல்கிறேன்?"

"எனக்கென்னமோ இது வேடிக்கையாகத்தான் இருக்கிறது: பூலோகத்திலிருந்து எத்தனையோ விஷயங்களைப் பற்றி நான் கவலைப்பட்டிருக்கிறேன், ஆனால் பசியைப்பற்றி நான் மட்டும் கவலைப்பட்டதே கிடையாது. ஏனெனில், சாகும் வரை என்னுடைய எஜமான் எனக்குச் சோறு போட்டு விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது" என்றான் நீக்ரோ பெருமையுடன்.

"தேவலையே! அப்படியானால் நீ பழைய அடிமை என்று சொல்லு" என்றான் இந்தியன்.

"நமக்குள்ளேயே வித்தியாசமா! நீ மட்டும் என்ன அடிமை?" என்று நீக்ரோசிரித்துக் கொண்டே கேட்டான்.

"புது அடிமை! ஏனெனில், உனக்கு இருந்த அந்தச் சோற்று நம்பிக்கை எனக்கு இல்லையல்லவா?" என்றான் இந்தியன்.

நீக்ரோ ஒரு கணம் யோசித்துவிட்டு, "அப்படியானால் நீ சொல்வதை நான் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் அப்பனே!" என்றான்.

***