பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இன்ப துன்பம்

49

வாசஞ் செய்து வந்தார். எல்லாக் காதலர்களையும் போல நாங்களும் கடைசியில் கல்யாணம் செய்து கொள்வதென்றும், இல்லாவிட்டால் பிராணனை விடுவதென்றும் தீர்மானம் செய்து கொண்டிருந்தோம். இந்தத் தீர்மானத்தை நாங்கள் கை விடும்படியான ஒரு சந்தர்ப்பம் என் வாழ்க்கையில் நேர்ந்தது.

என்னுடைய தங்கை தவமணியை உனக்குத் தெரியும். அவள் குரூபி என்பதையும் நான் உனக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவளுடைய கல்யாண விஷயத்தில் ஒரு தகராறு இருந்து வந்தது. அழகில்லை என்பதற்காக அவளைப் பார்க்க வந்த வரன் வீட்டுக்காரர்களெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு வரதட்சணை கேட்டனர். அப்படிக் கொடுத்தால் அவளுக்கு அழகு தானே வந்துவிடுமென்பது அவர்களுடைய எண்ணம் போலும்!

கடைசியில் ஒரு சம்பந்தம் வந்தது. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனாரான பின் தன் மனைவியைப் பிரிந்த ஒருவர், என்னை இளையாளாக அடைய இஷடப்பட்டார். அதற்குச் சம்மதித்தால் அவர்தம்முடைய தம்பிக்கு என்தங்கையை வரதட்சணை யில்லாமல் கல்யாணம் செய்து வைப்பதாக வாக்களித்தார். அப்பொழுது என் தங்தை திருவாங்கூர் பாங்கியில் பணம் போட்டு மோசம் போயிருந்த சமயம். மேற்சொன்ன சம்பந்தத்தை நிராகரிப்பதா யிருந்தால் பணம் நிறையத் தேவை. அதற்கு வழியில்லாத அவர் எந்த விதமான முடிவுக்கும் வர முடியாமல் திணறி, எனக்குக் கடிதம் எழுதி என்னை அபிப்பிராயம் கேட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தைப் படித்ததும் நான் எந்த விதமான நிலையை அடைந்தேன் என்பது இங்கே விவரிக்க முடியாத விஷயம். ஒன்றும் தோன்றாமல் அந்தக் கடிதத்தை கொண்டு போய் அவரிடம் கொடுத்தேன். அதைப் படித்த பிறகு அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு அளவில்லாத வியப்பையும் திகைப்பையும் அளித்தது.

என் கண்களில் கசிந்து வரும் கண்ணிரைக் கண்டதும், "இதென்ன பைத்தியமா உனக்கு? ஏன் அழுகிறாய்? கல்யாணமென்றால் யாராவது கவலைப் படுவார்களோ?" என்று அவர் கேட்டார்.

இதற்கு நான் என்ன பதில் சொல்வது? பேசாமல் இருந்தேன். அவரே மேலும் தொடர்ந்து சொன்னார்:

"நான் சொல்வதைக் கேள்; என்னைக் கல்யாணம் செய்து கொண்டால் எவ்வளவு தூரம் இன்பம் அனுபவிக்க முடியும் என்று

வி.க. -4