பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுயநலம்

57

அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? பலன் கிடைத்தது; பணம் குவிந்தது.

நாடெங்கும் கட்டில்களுக்கு ஏகக் கிராக்கி. யுத்த காலத்தில் துருப்புக்களுக்கு ஆயிரக்கணக்கில் கட்டில்கள் தேவையாயிருந்தன. ‘ஆர்டர்கள்' வந்து குவிந்தன.

"இனிமேல் வெறும் ஆட்களை வைத்துக் கொண்டு ‘ஆர்டர்'களைக் கவனிக்க முடியாது" என்று நினைத்த மாதவராயர். அமெரிக்காவிலிருந்து பல அதிசயமான யந்திரங்களைத் தருவித்தார். இருநூறு ஆட்கள் செய்யக் கூடிய வேலையை ஒரு யந்திரம் செய்தது. அது மரத்தை அறுத்தது; இழைத்தது; கூர் வாங்கியது. எல்லாம் செய்தது. பிரம்பைப் பிளப்பதற்கும், பின்னிவிடுவதற்கும்கூட யந்திரம் அவற்றை இயக்குவதற்குப் பழைய ஆட்கள் பிரயோஜனப்படவில்லை; புது ஆட்கள் வெளியூர்களிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள். இதனாலெல்லாம் நாளடைவில் வேலப்பன் இருந்த இடமே தெரியவில்லை - எப்படித் தெரியும்?

* * *

ஒரு நாள் வேலப்பன் வேலைக்குக் கிளம்பியபோது விளையாடிக் கொண்டிருந்த அவன் குழந்தை திடீரென்று மயக்கம் வந்து மூர்ச்சையாகி விழுந்துவிட்டது. முருகாயி கோவென்று கதற ஆரம்பித்து விட்டாள். வேலப்பன் பதறிப்போய்க் குழந்தையைத் துர்க்கித் தோளின்மேல் போட்டுக் கொண்டு டாக்டர் வீட்டுக்கு ஓடினான். சிறிது நேரம் சிகிச்சை செய்த பிறகு குழந்தை மூர்ச்சை தெளிந்து கண்ணை விழித்துப் பார்த்து, அப்பொழுது தான் வேலப்பனுக்கும் முருகாயியிக்கும் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.

இந்தக் களேபரத்தினால் வேலப்பன் அன்று வேலைக்குச் செல்லவில்லை.

இதன் காரணமாக மறுநாள் வேலைக்குச் சென்ற வேலப்பன் முன்னறிவிப்பு இல்லாமல் முதல் நாள் வேலைக்கு வராமற் போனதற்காக மேலதிகாரியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

ஆனால், தனிப்பட்ட முறையில் மேலதிகாரி அவனை வேலையிலிருந்து நீக்கவில்லை; முதலாளியின் உத்தரவின் பேரில் தான் நீக்கினார் . அப்படி நீக்கியதற்குக் காரணம் அன்று வேலப்பன் வேலைக்கு வராதது மட்டும் அல்ல; வேறொரு காரணமும் இருந்தது.