பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

வானில் மேலே மேலே சென்றான். ‘விஞ்சையருலகம் வருந்தி அழைத்தாலும், வாராத ஓர் அழகின் மாமணியை நான் அங்கே எடுத்துக் கொண்டு செல்கின்றேன்’ என்ற நினைவினால் பூரித்திருந்தான் மதன மஞ்சிகையைத் தூக்கியவாறே வானிற் சென்று கொண்டிருந்த மானசவேகன். தன்னுடைய மனம் அப்போதிருந்த மகிழ்ச்சியினாலும் கிடைத்த உற்சாகத்தினாலும் மேலும் மேலும் விரைவாகச் சென்றான்.

80. வேகவதியின் காதல்

தன மஞ்சிகையைத் தூக்கிச் சென்ற மானசவேகன் வித்தியாதரர் உலகத்திலுள்ள தன் தலைநகர் சென்று தனது அரண்மனையில் உள்ள ஓர் அழகிய மஞ்சத்தில் அவளைத் துயில வைத்தான். ‘துயில் நீங்கி உணர்வு பெற்று அவள் தானாக எழுந்த பின்புதான் அவளுக்குமுன் தான் தோன்ற வேண்டும். தோன்றித் தன் ஆசையை வெளியிட வேண்டும்’ என்றெண்ணிக் கொண்டு மானசவேகன் அப்பாற் சென்றான். இரண்டோர் நாழிகைகளில் மதன மஞ்சிகை துயிலுணர்ந்து எழுந்தாள். தன் அருகில் ஆருயிர்க் கொழுநன் நரவாண தத்தன் தென்படாமலிருப்பதையும், தான் இருக்கும் பகுதி அதுவரைதான் கண்டிராத முற்றிலும் புதியதொரு இடமாக இருப்பதையும் கண்டு திகைத்துத் துணுக்குற்றாள். ‘இந்தப் புதிய இடத்திற்கு எப்போது, எப்படி, யாரால் கொண்டுவரப் பட்டோம்?’ என்று மனம் குழம்பும்படி சிந்தித்துப் பார்த்தாலும் அவளுக்குத் தெளிவாக ஒன்றும் புலப்படவில்லை.

அவள் இவ்வாறு மயங்கி இருந்த நிலையில் மானசவேகனே அங்கு வந்து சேர்ந்தான். தான் அதுவரை கண்டிராத பழக்கமற்ற புதிய ஆடவன் ஒருவனைத் திடீரென்று அங்கே காண நேர்ந்ததும் மதனமஞ்சிகை திடுக்கிட்டாள். ஆனால் மானசவேகனோ, தான் கோசாம்பி நகரத்துச் சோலையிலிருந்து அவளைத் தூக்கிக்கொண்டு வந்தது முதலிய செய்திகளை அவளிடம் இனிய மொழிகளாற் கூறித் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இணங்குமாறும் வேண்டினான்.