பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. பூவணத்துப் புனிதர்

அழகு அனுபவத்தைப் பற்றி எவ்வளவோ ஆய்ந்திருக்கிறார்கள் அறிஞர்கள்! பொதுவாக நாம் இயற்கைக் காட்சிகள், சித்திரங்கள், சிற்பங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது அவை அழகாயிருக்கின்றன என்று எண்ணுகிறோம். அதனால் மகிழ்ச்சி அடைகிறோம். இதுதான் அழகு அனுபவம். இந்த அனுபவம் வெறும் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிப்பதோடு அமையாமல் உள்ளம் நிறைந்தததாகவும் இருக்குமானால் அதை வாயால் வர்ணிக்கவும் முடியாது, பாகுபடுத்திப் பார்க்கவும் முடியாது. ஸ்ரீமதி பால சரஸ்வதியின் பரத நாட்டியம் பல வருஷங்களுக்கு முன் அமரர் ஸிகமணி அவர்கள் வீட்டில் நடந்தது. நாங்கள் பலர் பார்த்துக் கொண்டிருந்தோம். எவ்வளவோ அனுபவங்களைப் பெற்றோம். ஆனால் பெற்ற அனுபவத்தைச் சொல்லத் தெரியாமல், சொல்ல முடியாமல் தவித்தோம். ஆனால் டி. கே. சி. அவர்கள் வீட்டு வேலைக்காரி நடனம் முடிந்ததும், 'அ...! பாதகத்திமகள் எப்படி எல்லாம் ஆடுகிறாள்!' என்று சொல்லிக் கொண்டு மூக்கில் விரலை வைத்து நின்று விட்டாள். இதைப் பார்த்த டி.கே.சி 'இதுவே கலை அனுபவம், அழகு அனுபவம்' என்றார்கள்.

இதே போல் ஓர் அனுபவம் பொன்னனையாள் என்ற கணிகைக்கு, பொன்னனையாள் சிறந்த பண்புகள் நிறைந்தவள்: நல்ல சிலபக்தை. வருகிற சிவனடியாரையெல்லாம் உபசரித்து உணவருத்துவதிலேயே அவள் செல்வம் எல்லாம் கரைகிறது. அவளுக்கு ஓர் ஆசை, சிவபெருமானை நல்ல பஞ்சலோகத்தில் ஒரு மூர்த்தியாக வடித்துப் பார்க்க வேண்டும் என்று. அதற்கு அவளிடம் பணம் இல்லை . அதற்காக வருந்துகிறாள். அவளது விருப்பத்தை நிறைவேற்றத் திருவுளம் கொண்ட சிவபெருமான், ஒரு சித்தர் வடிவிலே வருகிறார். அவள் விருப்பம் என்ன என்று