பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

வேங்கடம் முதல் குமரி வரை

மண்டபத்துக்கே போய்விடலாம். அங்கே தான் தங்க மஞ்சத்திலே திருமகளும் நிலமகளும் இருபுறமும் இருக்கக் கள்ளப்பிரான் கையில் கதையுடன் நிற்கின்றார். நல்ல தங்கக் கவசம் அணிந்திருக்கிறார். அதைவிட அழகான திருமேனி உடையவர் அவர். அவரைச் சமைக்க சிற்பி அவரது திருமேனி அழகினால் கொள்ளை கொள்ளப்பட்டு மெய்மறந்து அவருடைய கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினான் என்றும், அப்படி அவன் தொட்டுக் கொஞ்சிய இடம் கன்னத்தில் பதிந்திருக்கிறது என்றும் சொல்வார்.

இந்த அர்த்த மண்டபத்துக்கும் அப்பால் உள்ள கருவறையிலேதான் வைகுந்த நாதர் நல்ல சிலை வடிவிலே நின்று கொண்டிருக்கிறார். சோமுகாசுரன், பிரம்மாவிடத்திலிருந்து நான்கு வேதங்களையும் பிடுங்கிச் செல்ல, அதற்காக வருந்தி பிரமன்தவம் செய்ய, வைகுந்தநாதன் பிரம்மனது தவத்துக்கு இரங்கிக் கருடன்மீது ஏறிவந்து சோமுகாசுரனை வென்று மறைகளை மீட்டுப் பிரம்மாவிடம் கொடுத்திருக்கிறார். கருவறையில் அந்த அரங்கநாதனைப்போல, ஸ்ரீதேவி பூதேவி எல்லாம் இல்லாமல் தனித்தே இருக்கிறார் வைகுந்தநாதர். பிரம்மனுக்காக அவசரமாக எழுந்தருளிய காரணத்தால் தன்னந்தனியே வந்திருக்கிறார் போலும். இவரையே பால் பாண்டியன் என்றும் அழைக்கிறார்கள். அன்று நான்முகன் பூசித்த வைகுந்த நாதர், சிலகாலம் மன்துக்குள்ளேயே மறைந்திருக்கிறார், அப்படி மறைந்திருந்த இடத்தில் அங்குள்ள பசுக்களெல்லாம் பால் சோரிய, அதை அரசனிடம் கோவலர்கள் அறிலித்திருக்கிறார்கள். அந்த இடத்துக்கு மன்னன் வந்து வெட்டிப் பார்த்து வைகுந்தநாதனை வெளிக் கொணர்ந்திருக்கிறான். இது காரணமாகவே இவருக்கு நாள்தோறும் பால் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பாற்கடலிலே பள்ளிகொள்ளும் பரந்தாமன் பால் திருமஞ்சனம் பெறுவதும் அதனால் பால் பாண்டியன் என்று பெயர் சூட்டப்படுவதும் அதிசயமில்லைதானே.

இந்த வைகுந்தநாதனை வருஷத்துக்கு இரண்டு முறை சூரியன் வழிபாடு செய்கிறான். சித்திரை மாதம் ஆறாம் தேதி,