பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

வேண்டும் விடுதலை

நாங்கள் அந்தக் குற்றத்தை (குற்றமா அது? கொடுமை, நீக்கம், உரிமை மீட்பு குற்றமாகுமா? அதை ஏன் குற்றம் என்று கலைஞர் ஒப்புக்கொள்ள வேண்டும்?; செய்துகொண்டே இருப்போம்” என்று கூறியிருக்கும் கருத்தை தமிழர் அனைவரும வரவேற்க வேண்டும்; கலைஞர்கள் அவர்கள் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை. "உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்" என்னும் திருக்குறளில் தன் வலிமை உணராமல் , தன் அளவு மீறிய வினையில் ஈடுபடுவது எவ்வளவு அறியாமையோ, அவ்வளவு அறியாமை மிக்கது, தன் வலிவை உணர்ந்தும் ஒருவர் அவ்வினையில் ஈடுபடாமல், செய்தக்க செய்யாமல், காலத்தை வீணாக்குவது என்பதை கலைஞர் உணர்தல் வேண்டும். தமிழினத்தின் உயிரை தம்மின் உயிராகக் கலைஞர் கருதவேண்டும். அரசியல் பதவிபெறும் முயற்சியில் அவ்வுயிர் வீணாய்ப் போவதைவிட, தமிழின உரிமை மீட்பு முயற்சியில் அதுபோவது அவர்க்கு எவருக்குமே இல்லாத வரலாற்றுப் பெருமை தருவதாகும். எனவே தமிழீழக் கொள்கையில் அவர் சிறிதும் தளர்ச்சிக் காட்ட வேண்டியதில்லை. நேற்று வந்த பழனியாண்டிகளின் அச்சுறுத்தலுக்கும் இளைஞர் இந்திராப் பேராயக் குட்டித் தலைவர்களின் மிரட்டல்களுக்கும் கலைஞர் அவர்கள் பின்வாங்க வேண்டியதில்லை. தங்கள் தந்நலத்துக்காகத் தமிழினத்தையே அடகு வைக்கத் துணிந்துவிட்ட அவ்வின நலக் கேடர்களின் குருட்டுப் போக்குக்கு ஓர் இறுதி முடிவு வரும்.

தனித்தமிழ் நாட்டுப் போராட்டத்தை அல்லது கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல இதுவே தக்க நேரம், அவ்வாறான ஒரு தக்கப் போராட்டத்தை கலைஞர் நேரம் பார்த்து அறிவிப்பாரானால், அவரைப் பின்பற்றித் தமிழகமே எழுச்சியுறுவது திண்ணம். அத்தகைய வீர வெற்றிப் போராட்டத்தை அவரே முன்னறிவிக்க வேண்டும். மற்றபடி உதிர்ந்து போகும் வெறும் அரசியல் சில்லுண்டி நலன்களுக்கு கருத்து செலுத்துவது அவர்க்குத் தாழ்ச்சியையே கொடுக்கும்.

நல்லாண்மை என்ப தொருவற்குத் தாம்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
- தமிழ்நிலம், இதழ் எண். 63, 1985