பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வேண்டும் விடுதலை

நோக்குடன், ஒரு மாநாட்டைத் திருச்சியில் கூட்டியுள்ளேன். அது முழுக்க முழுக்க விடுதலை மாநாடுதான். ஆனால் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத் “தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு” என்று பெயர் கொடுத்துள்ளேன். அவர்களின் கண்களுக்கு இப்பெயர் மட்டும் தெரிந்து இதன்நோக்கம் தப்ப வேண்டும் என்று நான் எண்ணியது. இம் மாநாட்டிற்குக் கிடைக்க வேண்டிய எல்லா வகை இசைவுகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். (இப்படி வெளிப்படையாக எழுதுவதை அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ள மாட்டார்களா என்பதை நான் எண்ணாமல் இல்லை. அவர்கள் தங்களைப் பற்றிய கருத்துரைகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதை நான் நமக்கு ஆக்கமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். அவ்வளவுதான்) எப்படியாவது மாநாடு நடக்க வேண்டும்; நாமெல்லாம் ஒன்று கூடவேண்டும்; மனம் விட்டுப் பேச வேண்டும்; நம் உரிமைகளை நாம் போராடிப் பெற வேண்டும். என்பவைதான் என் உயிர் நோக்கம். மாநாட்டிற்குத் தலைவராக ஒருவரையும் அமர்த்தவில்லை. வரப்போகும் அன்பர்களில் ஒருவர் அங்கேயே தலைவராக அமர்த்தப்பெறுவர். மாநாட்டின் அறிக்கை வேறு பக்கங்களில் அச்சாகியுள்ளது. இம் மாநாடு உ. த. க. மாநாடு அன்று. அதற்கு எதிரானதும் அன்று. விடுதலை நோக்கம் அதில் இணையாமையால் இப்படித் தனி மாநாடாக இதை நடத்த வேண்டியுள்ளது.

மற்றப்படி தமிழகத்தின் எல்லாக் கட்சித் தலைவர்களுக்குமே மாநாட்டின் அழைப்பு அச்சிட்டு விடுக்கப் பெறும். என் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சிலரை மட்டும் மாநாட்டுச் செயற்குழு உறுப்பினர்களாக, அவர்களைக் கேளாமலேயே, தெரிந்தெடுத்துள்ளேன். விருப்பமில்லையானால் அவர்கள் தங்களுக்குத் தந்த பொறுப்பினின்று விலகிக் கொள்வதாக எனக்கு எழுதலாம். அவற்றை அடுத்த இதழில் அறிவித்து விடுவேன். மாநாட்டுத் தொடர்புடைய பிற செய்திகளைப் பற்றி அடுத்த இதழிலும் எழுதுவேன். நான் உங்களைத் தலைவணங்கி வேண்டிக் கொள்வதெல்லாம் ஒவ்வொருவரும் தவறாமல் மாநாட்டிற்கு வரவேண்டும்; நாம் இனிசெய்ய விருப்பதைப் பற்றி எண்ணம் வேண்டும் என்பது தான்! நேரம் வந்துவிட்டது; படை முகத்துக்கு வந்து சேருங்கள்.

- தென்மொழி, சுவடி :9, ஓலை 12. 1972