பக்கம்:வேத வித்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரின் மற்ற படைப்புகள் ஒவியங்களென்றால் இது சிற்பம். மனசுக்குள் கனமாய் உட்கார்ந்து கொண்டு, பேசும் சிற்பம். சாவியின்மற்ற படைப்புகள் தீட்டப்பட்டவை என்றால் இது வடிக்கப் பட்டது. இந்த நாவலுக்குள் அவர் ஆண்டிருக்கும் விஷயம் ஆபத்தானது என்று கருதப்படுவது. கத்தி எடுத்து யுத்தம் செய்வது எளிது. . . ஆனால், கத்தி மேல் நடந்து யுத்தமும் செய்வது கடிது. நின்று விட்டாரே! கத்திமேல் நின்று போர் புரிந்து சாவி வென்று விட்டாரே! மாறி வரும் மனித மதிப்பீடுகளை எதிர்காலத்தில் ஆராயப் புகும் போது இந்த நாவல் அதற்குச் சேதாரமில்லாத ஆதாரமாக விளங்கும் என்பது என் எண்ணம். காலங்காலமாய் இந்தச் சமூகத்தின் கால்களைப் பிணைத்திருக்கும் சாஸ்திரச் சங்கிலிகளை மயிலிறகு வார்த்தைகளால் வருடிக் கொண்டே சம்மட்டியால் அடித்திருக்கிறார் சாவி. • "நம்ப சமூகம், சமுதாயம் எல்லாம் நல்லபடியா வாழனுங்கி றதுக்குத்தானே சம்பிரத்ாயமல்லாம் இப்படி வாழ்க்கையே அடியோடு நாசமாப் போயிடறதுக்கு ஒரு சாஸ்திரமா? அது நமக்குத் தேவைதானா? அப்படிப்பட்ட சாஸ்திரத்தை மாத்தி அமைக்க வேண்டியதுதானே!" (பக்கம் 6) இதுதான் இந்த நாவலுக்கு, சாவி அவர்கள் எடுத்திருக்கிற ஆழமான அஸ்திவாரம். - தான் போட்டுக் கொண்ட இந்த எல்லைகளைத் தாண்டி சாவி அவர்கள் தன் பேனாவை ஒரு மில்லி மீட்டரும் அசைக்கவில்லை. இப்படி கனமான விஷயத்தைச் சுமந்து கரையேற்றுவதும், கரையேறுவதும் கஷ்டம். சாவி அவர்கள் கரையேறியிருக்கிறார் ; கரையேற்றியுமிருக்கிறார்; இந்தத் துணிச்சல் அவருக்கு வெறும் வேட்கையால் வந்ததன்று: வாழ்க்கையால் வந்தது. . இந்த நூலின் வாசகங்களெங்கும் வைதீக வாழ்க்கையின் வடிவங்கள் வண்டல் வண்டலாகப் படிந்து கிடக்கின்றன. எந்த எழுத்தாளனுக்கும் இரண்டு கலைகள் வேண்டும். ஒன்று. அவன் உணரத்தெரிந்திருக்க வேண்டும். இரண்டு, உணர்ந் ததை உணர்த்தத் தெரிய வேண்டும். - அவன் சமுத்திரத்தைப் பற்றி எழுதினால் வாசகனின் வேட்டியின் கரையாவது நனைய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/7&oldid=918881" இலிருந்து மீள்விக்கப்பட்டது